யாரொடு எண்ணி - நுண்ணிய நூலறிந்த அமைச்சருடன் ஆராய்ந்து; விய நெறியால் விடுத்தான் - போகவிடும் நெறியாலே போகவிட்டான்; கோயில் புக்கான் - சீவகனும் கனகமாலையின் கோயிலை அடைந்தான்.
( 330 )
1887
விள்ளா வியனெடுந்தோ் வேந்தன்
காதன் மடமகளே
கள்ளாவி கொப்புளிக்குங் கமழ்பூங்
கோதா யென்மனத்தி
னுள்ளாவி யுள்ளாய்நீ யொழிந்தா
யல்லையெனக் கையிற்
புள்ளாவிச் செங்கழுநீர்க் குவளை
செய்தாள் புனைபூணாள்.
(இ - ள்.) வியன் நெடுந்தேர் வேந்தன் காதல் விள்ளா மடமகளே! - பெரிய நீண்ட தேரையுடைய வேந்தனின் அன்பு நீங்காத மகளே!; கள்ஆவி கொப்புளிக்கும் கமழ்பூங் கோதாய்! தேனின் மணத்தை உமிழும் மணங் கமழ் மாலையாய்!; என் மனத்தின்உள் ஆவி உள்ளாய் - என் மனத்திலே உறைகின்ற உயிராய் உள்ளாய்; நீ ஒழிந்தாய் அல்லை - (ஆதலின்) நீ நீங்கினாய் அல்லை; என - என்று பிரிவின் - குறிப்புப் புலப்படக் கூற; புனை பூணாள் - அதனை உணர்ந்த பூணினாள் ; கையில் புள் ஆவிச் செங்கழுநீர் - தன் கையில் இருந்த, வண்டிற் குயிராகிய செங்கழு நீரை; குவளை செய்தாள் - தன் நெட்டுயிர்ப்பினாற் கருங்குவளையாக்கினாள்.
(வி - ம்.) இனி, 'கள்ளாவி கொப்புளிக்கும்' என்பதற்குக் 'கள்ளை நீராவியாகக் கொப்பளிக்கும்' என்றும் , 'ஆவி உள்ளாய்' என்பதற்கு, 'உயிரிலே இருத்தலின்' என்றும், 'புள் ஆவிச் செங்கழுநீர்' என்பதற்கு, 'அன்னங்களை உடைய வாவியிற் கழுநீர்' என்றும் உரைப்ப.