(இ - ள்.) வார் முயங்கும் மென்முலைய வளைவேய்த் தோளாள் மகிழ - (அதுகண்டு) கச்சிறுகும் மென் முலையையும் வளையணிந்த மூங்கிலனைய தோளினையும் உடையாள் மகிழவும்; நீர் முயங்கு கண் குளிர்ப்ப - நீர் தழுவிய கண் குளிரவும்; நீள் தோளவன் புல்லி - நீண்ட தோளுடைய சீவகன் தழுவி; நீங்கி - அங்கிருந்து போய்; தேர் முயங்கு தானையான் சிறுவர் - தேரையுடைய படையினனின் மக்களின்; சேடு ஆர் அகல் மார்பம் தார் முயங்கி - பெருமை பொருந்திய அகன்ற மார்பிலே தாருறத்
தழுவி; கூந்தல்மா இவர்ந்தான் - புரவிமீது ஏறினான்; சங்கம் முரன்ற - சங்குகள் ஒலித்தன.
(வி - ம்.) வார் - கச்சு, தோளாள் : கனகமாலை. பிரிவை நினைந்து கண்ணீர்மல்க நிற்றல் தோன்ற, நீர் முயங்குகண் குளிர்ப்ப என்றார். தோளவன் : சீவகன். தானையான் சிறுவர் என்றது விசயன் முதலியோரை. சேடு - பெருமை, கூந்தன்மா - குதிரை.
கனகமாலையார் இலம்பகம் முற்றும்.