சீவகன் வந்து புகுந்தவுடனே அச் சாகரதத்தன் கடையிலே விலையாகாமற் றங்கிக்கிடந்த சரக்கெல்லாம் விலையாகி விட்டன. அது கண்ட தத்தன் சீவகனை நோக்கி, முகமன் மொழிந்து, ”ஐய! கணியொருவன் நின் மகள் விமலை என்பாளுக்குரிய கணவன் நின் கடைக்கு வலிய வருவான். அவன் வந்தமைக்கு அறிகுறி அப்பொழுது நின் கடைச் சரக்கெல்லாம் ஊதியமுண்டாக விரைவின் விற்றுப்போம் கண்டாய்! என்று எனக்குக் கூறியிருந்தான். அங்ஙனமே நீ என் கடையேறியவுடன் அப் பழஞ்சரக்கெல்லாம் விலைப்பட்டன. ஆதலால் நீயே விமலை கணவன் ஆதல் கூடும் என்று கருதுகின்றேன்,” என்று கூறி அவனை ஆர்வத்துடன் அழைத்தேகி விமலையை அவனுக்கு மணம் செய்வித்தனன். சீவகன் அவளுடன் இரண்டு நாள் கூடி இன்புற்றிருந்து மறுநாள் சென்று மனக்கினிய தோழரைக் கண்டனன்.
|