பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1070 

1889 முருகுகொப் புளிக்குங் கண்ணி
  முறிமிடை படலை மாலைக்
குருதிகொப் புளிக்கும் வேலான்
  கூந்தன்மா விவர்ந்து செல்ல
வுருவவெஞ் சிலையி னாற்குத்
  தம்பியிஃ துரைக்கு மொண்பொற்
பருகுபைங் கழலி னாருட்
  பதுமுகன் கேட்க வென்றே.

   (இ - ள்.) முருகு கொப்புளிக்கும் கண்ணி - தேனைப் பிலிற்றும் தலை மாலையினையும்; முறிமிடை படலைமாலை - தளிர் கலந்த வகைமாலையினையும்; குருதி கொப்புளிக்கும் வேலான் - செந்நீரை உமிழும் வேலினையும் உடைய சீவகன்; கூந்தல் மா இவர்ந்து செல்ல - குதிரை மீதேறிச் செல்ல; உருவ வெஞ்சிலையினாற்குத் தம்பி - அழகிய கொடிய வில்லேந்திய சீவகனுக்குத் தம்பியான நந்தட்டன்; ஒண் பொன் பருகு பைங்கழலினாருள் பதுமுகன் கேட்க என்று இஃது உரைக்கும் - ஒள்ளிய பொன் பொருந்திய கழலணிந்த தோழர்களில் பதுமுகனைக் கேட்பாயாக என விளித்து இதனைக் கூறுவான்.

   (வி - ம்.) அது மேற் கூறுகின்றார். 'சிலையினாற்கு' உருபு மயக்கம் என்பர் நச்சினார்க்கினியர்.

   முறி - தளிர். கண்ணி - தலையிற் சூடுமாலை. படலைமாலை - தழை விரவிய மாலை. வேலான் : சீவகன். தம்பி : நந்தட்டன். கழலினாருள் - தோழருள். பதுமுகன் : விளி.

( 1 )
1890 விழுமணி மாசு மூழ்கிக்
  கிடந்ததிவ் வுலகம் விற்பக்
கழுவினீர் பொதிந்து சிக்கக்
  கதிரொளி மறையக் காப்பிற்
றழுவினீ ருலக மெல்லாந்
  தாமரை யுறையுஞ் செய்யாள்
வழுவினார் தம்மைப் புல்லாள்ட்
  வாழ்கநுங் கண்ணி மாதோ.

   (இ - ள்.) விழுமணி மாசு மூழ்கி இவ்வுலகம் விற்பக் கிடந்து - சிறந்த மணி மா சேறி இவ்வுலகை விலையாகப் பெறும் படி கிடந்ததனை; கழுவினீர் - கடுக வெளியாக்கி விட்டீர்; சிக்கப் பொதிந்து கதிர் ஒளி மறையக் காப்பின் - இனி, முன்போல அகப்படப் பொதிந்து கதிரொளிக்கு மறைவாகக் காப்பீராயின்;