பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1078 

கிடந்து ஒளிர் மணி திருக்களர் ஒளி குலாய் - பொன் கிடந்து ஒளிரும் மணிகளின் அழகிய கிளர்ந்த ஒளியுடன் குலாவி; மேல் திருவில் வீழ்ந்து - மேலுண்டாகிய வானவில் வீழ்ந்து; ஒருக்குலாய் நிலமிசை மிளிர்வ ஒத்து - ஒருங்கு வளைந்து விளங்குவன போன்று; வான் அகம் செகுக்கும் - வானத்தை வெல்லும்.

   (வி - ம்.) செய்தென் எச்சங்களைக் காரணம் ஆக்குக. பொருப்பெலாம் செகுக்கும். ஒருங்கு குலாய் : ஒருக்குலாய் : விகாரம்.

( 15 )
1904 வீழ்பனிப் பாறைக ணெறியெலாம் வெவ்வெயிற்
போழ்தலின் வெண்ணெய்போற் பொழிந்துமட் டொழுகுவ
தாழ்முகில் சூழ்பொழிற் சந்தனக் காற்றசைந்
தாழ்துயர் செய்யுமவ் வருவரைச் சாரலே.

   (இ - ள்.) அவ் அருவரைச் சாரல் நெறியெல்லாம் - அந்த அரிய மலைச்சாரலின் வழியெங்கும்; வீழ் பனிப் பாறைகள் - வீழ்ந்த பனிப் பாறைகள்; வெவ்வெயில் போழ்தலின் - கொடிய வெயில் உருக்குவதால்; வெண்ணெய் போல் பொழிந்து - வெண்ணெய்போலப் பொழிவதும் புரிந்து; மட்டு ஒழுகுவ தாழ்முகில் சூழ் பொழில் - தேனொழுகுவன வாகிய, முகில்சூழ் பொழிலிலே; சந்தனக் காற்று அசைந்து - சந்தனக் காற்றும் வீசி; ஆழ்துயர் செய்யும் - மிகுதுயரைச் செய்யும்.

   (வி - ம்.) வீழ்பனிப்பாறை : வினைத்தொகை. மட்டு - தேன். தாழ் முகில் : வினைத்தொகை. சூழ்பொழில் : வினைத்தொகை. நெறிகள் பொழியப்பட்டு அசையப்பட்டுத் துயர் செய்யும் என்க.

( 16 )
1905 கூகையுங் கோட்டமுங் குங்கும மும்பரந்
தேகலா காநிலத் தல்கிவிட் டெழுந்துபோய்த்
தோகையு மன்னமுந் தொக்குட னார்ப்பதோர்
நாகநன் காவினு ணயந்துவிட் டார்களே.

   (இ - ள்.) கூகையும் கோட்டமும் குங்குமமும் பரந்து - கூகை என்னுங் கொடியும் கோட்டம் குங்குமம் என்னும் மரங்களும் பரவியிருப்பதால்; ஏகல் ஆகா நிலத்து அல்கி - அழகாற் போதற்கு அரிய நிலத்தே தங்கி; விட்டு எழுந்து போய் - அவ்விடத்தைவிட்டு எழுந்து சென்று; தோகையும் அன்னமும் தொக்கு உடன் ஆர்ப்பது - மயிலும் அன்னமுங் கூடி ஆரவாரிப்பதாகிய, ஓர் நாக நன்காவினுள் நயந்து விட்டார்கள் - ஒரு நாகமரப் பொழிலிலே விரும்பித் தங்கினார்கள்.

   (வி - ம்.) கூகை - ஒருகொடி. கோட்டம் குங்குமம் என்பன மரங்கள். பரத்தலால் ஏகலாகா எனலே அமையும். அழகால் போதற்கரிய என்பர் நச்சினார்க்கினியர். அல்கி - தங்கி. விட்டார்கள் - தங்கினார்கள்.

( 17 )