பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1081 

கண் ஆடும்; இன்னே பல்லியும் பாங்கர் பட்ட - இப்பொழுதே பல்லியும் நல்ல இடத்தே பட்டன; நம்பி வருங்கொலோ என்று சொல்லினள் - (ஆதலால்) நம்பி வருவானோ என்று கூறியவளாய் - தேவி நிற்ப - விசயை நிற்ப; பதுமுகன் தொழுது சேர்ந்து - பதுமுகன் தொழுதவாறு சென்று; நல்அடி பணிந்து - அழகிய அடியிலே வணங்கி; அடிகள் நம்பி வந்தனன் என்றான் - அடிகளே! நம்பி வந்தான் என்றான்.

   (வி - ம்.) எல் - பகல். நம்பி : 'நம்' என்பது முதனிலையாக 'நமக்கு இன்னான்' என்னும் பொருள்பட வருவதோர் உயர்ச்சிச்சொல்.

   எல்லிருள் - விடியற்காலத்திருள். விடியற்காலத்திருளிலே கண்ட கனா அண்மையிலேயே பலிக்கும் என்பது கனா நூற்றுணிபு. இதனைப் ”படைத்த முற்சாமமோ ராண்டிற் பலிக்கும் பகரிரண்டே கிடைத்த பிற் சாம மிகுதிங்கள் எட்டிற் கிடைக்குமென்னும் இடைப்பட்ட சாமமோர் மூன்றினிற் றிங்களொர் மூன்றென்பவால்” என்னும் கனா நூலானும் உணர்க; (சிலப். 15 : 95-106. அடியார்க். மேற்.)

( 21 )
1910 எங்கணா னைய னென்றாட்
  கடியன்யா னடிக ளென்னாப்
பொங்கிவில் லுமிழ்ந்து மின்னும்
  புனைமணிக் கடக மார்ந்த
தங்கொளித் தடக்கை கூப்பித்
  தொழுதடி தழுவி வீழ்ந்தா
னங்கிரண் டற்பு முன்னீ
  ரலைகடல் கலந்த தொத்தார்.

   (இ - ள்.) எங்கணான் ஐயன் என்றாட்கு - எங்குளான் என் ஐயன் என்றாட்கு; அடியன் யான் அடிகள் என்னா - அடியேன் ஈங்குளேன் அடிகளே என்று; பொங்கி வில் உமிழ்ந்து மின்னும் புனை மணிக்கடகம் ஆர்ந்த - மிகுதியாக ஒளியை உமிழ்ந்து விளங்கும் அழகிய மணிக் கடகம் பொருந்திய; தங்கு ஒளித் தடக்கை கூப்பித் தொழுது - ஒளி தங்கிய பெரிய கையைக் குவித்துத் தொழுது; அடிதழுவி வீழ்ந்தான் - (பிறகு) அன்னையின் அடிகளைத் தழுவி வீழ்ந்தான்; அங்கு இரண்டு அற்பு முன் நீர் அலைகடல் - அவ்விடத்து அவ்விருவரும் முன்னீராலே இரண்டு் அற்புக் கடல் கலந்தது போன்றார்.

   (வி - ம்.) முன்நீர் - முற்பட்ட நீர்மை : 'உதிரம் உறவறியும்' என்னும் பழமொழியை நோக்குக. இது கருதியே, முன் (சீவக. 1908) 'வெள்ளிடைப் படாத' என்றார். அடிகள் அன்பும் சீவகன் அன்பும் சொல்லொணா அளவிற்று. அம்முறையால் அவ்விரண்டனையும் இரண்டு கடலென்று உருவகித்தார்.

( 22 )