பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1087 

செய்வாரைப் பிரித்துத் தம்மோடு கூட்டிக்கொள்ளுதல் : பெட்டது - அரசர் விரும்பப்பட்ட பொருளாகும்.

   (வி - ம்.) 'முள்ளினால் முட்களையுமாறு' (பழ. 54)

   வினை செய்வாரைப் பிரித்தலாவது பகைமன்னரிடம் வினை செய்வாராய்ச் சிறந்திருப்பாரைப் பிளவுபடுத்தித் தம்முடன் கூட்டிக் கொள்ளுதல்.

( 32 )
1921 ஒற்றர்தங்களை யொற்றரி னாய்தலுங்
கற்ற மாந்தரைக் கண்ணெனக் கோடலுஞ்
சுற்றஞ் சூழ்ந்து பெருக்கலுஞ் சூதரோ
கொற்றங் கொள்குறிக் கொற்றவற் கென்பவே.

   (இ - ள்.) ஒற்றர் தங்களை ஒற்றரின் ஆய்தலும் - ஒற்றரை ஒற்றரைக் கொண்டே ஆராய்தலும்; கற்ற மாந்தரைக் கண்எனக் கோடலும் - அறநூல் கற்ற அமைச்சரைக் கண்போலக் கொள்வதும்; சுற்றம் சூழ்ந்து பெருக்கலும் - மந்திரிச் சுற்றத்தையும் தந்திரிச் சுற்றத்தையும் இவன் இதற்குரியன் என்று ஆராய்ந்து பெருக்கலும்; கொற்றம் கொள் குறிக் கொற்றவற்குச் சூது என்ப - வெற்றிகொள்ளுங் கருத்தையுடைய அரசற்குச் சூழ்ச்சி யென்ப.

   (வி - ம்.) இச் செய்யுட் கருத்தோடு,

”ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்” எனவும், (குறள். 588)
”ஒற்றொற் றுணராமை யாள்க” எனவும், (குறள். 589)
”சூழ்வார் கண்ணாக ஒழுகல்” எனவும், (குறள். 445)

   வரும், வள்ளுவர் மெய்ம்மொழிகளையும் ஒப்பிட்டுக் காண்க.

( 33 )
1922 வென்றி யாக்கலு மேதக வாக்கலுங்
குன்றி னார்களைக் குன்றென வாக்கலு
மன்றி யுங்கல்வி யோடழ காக்கலும்
பொன்றுஞ் சாகத்தி னாய்பொருள் செய்யுமே.

   (இ - ள்.) பொன் துஞ்சு ஆகத்தினாய் - திருமகள் தங்கும் மார்பினாய்!; வென்றி ஆக்கலும் - வெந்றியை உண்டாக்கலும்; மேதகவு ஆக்கலும் - மேம்பாட்டை உண்டாக்கலும்; அன்றியும் - இவைகளே அல்லாமல்; கல்வியோடு அழகு ஆக்கலும் - கல்வியையும் அழகையும் உண்டாக்கலும்; குன்றினார்களைக் குன்று என ஆக்கலும் - மெலிந்தவரை மலையென வலியுடையராக்கலும்; பொருள் செய்யும் - பொருளாற் செய்ய வியலும்.