பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 109 

   (இ - ள்.) குங்குமத் தோளினானும் கொழுங்கயற் கண்ணினாளும் - குங்குமம் அணிந்த தோளானும் மதர்த்த கயலனைய கண்ணாளும்; தங்கிய காதல் வெள்ளம் தணப்பு அறப் பருகும் நாளுள் - நிலைபெற்ற காதற் பெருக்கை நீக்கமின்றி நுகரும் காலத்தில்; திங்கள் வெண்குடையினாற்குப் பைங்கதிர் மதியில் திரு இழுக்குஉற்ற வண்ணம் - திங்களனைய வெண்குடையினையுடைய அவனுக்குப் பசிய நிலவினையுடைய மதிபோலச் செல்வம் நாளடைவிற் குறைந்த தன்மையை; தௌ்ளிப் பகர்ந்து - தெரிந்து கூறி; எடுத்து உரைத்தும் - (பின்னர்) சீவகன் சரிதம் எடுத்துரைக்கத் தொடங்குகிறோம்.

 

   (வி - ம்.) இதன் கருத்து: இச் செய்யுட்கு அங்கமாகிய [நாடு, நகர், கோயிற் சிறப்பு முதலிய] வருணணைகள் கூறி, அதற்குரிய தலைவனை நாட்டுகின்றார். இத்துணையும் அவன் தோன்றற்குக் காரணங் கூறி , அதற்கு முற்பிறப்பில் அன்னப் பார்ப்பைப் பிரித்த தீவினை வந்து குரவரைப் பிரித்தலுங் கூறவேண்டுதலின், திரு இழுக்குற்றமை முற் கூறுகின்றா ரென்றுணர்க. திரு இழுக்குறுதலாவது கட்டியங்காரற்கு அரசளித்தலும் அமைச்சர்சொற் கேளாமையும்.

 

   [சீவகன் முற்பிறப்பு வரலாறு இந்நூலின் 2856 ஆஞ் செய்யுள் முதலியவற்றால் உணர்க.]

 

   பைங்கதிர் மதியின் திருவிழுக்குற்ற என மாறுக. மதி - தேய் பருவத்துத் திங்கள்.

 

   இனி, பைங்கதிர் மதி என்பதற்கு அறிவு என்றே பொருள்கோடல் அமையும். ஆசிரியர் பரிமேலழகர் இப்பொருளே கொண்டனர். இதனை, அவர்” ஒளிதிகழ் உத்தி உருகெழு நாகம்” (12-4) எனவரும் பரிபாடல் அடிக்கு வாளா - நாகம் (மரம்) என்றே பொருள் கூறி, 'நெட்டிலை வஞ்சிக்கோ' (பழம்பாடல்) என்புழியும் 'புல்லிலை வஞ்சிப் புறமதில் அலைக்கும் கல்லென் பொருநை' (புறநா. 387) என்புழியும் மரவிசேடத்திற்குள்ளன அதன் பெயர்த்தாய ஊரின்கண்ணும் 'திங்கள் வெண்குடையினாற்குத் திருவிழுக் குற்றவண்ணம் பைங்கதிர் மதியிற் றெள்ளிப் பகர்ந்தெடுத் துரைத்தும்' என்புழிச் சந்திரற்குள்ளது அவன் பெயர்த்தாய அறிவின்கண்ணும் ஏற்றப் பட்டாற் போல் ” என்று கூறுதலான் உணர்க.

( 170 )
200 களிறனா னமைச்சர் தம்முட் கட்டியங் கார னென்பா
னொளிறுவாட் டடக்கை யானுக் குயிரென வொழுகு நாளுட்
பிளிறுவார் முரசிற் சாற்றிப் பெருஞ்சிறப் பியற்றி வேந்தன்
வெளிறிலாக் கேள்வி யானை வேறு கொண்டிருந்து சொன்னான்.

   (இ - ள்.) களிறனான் அமைச்சர் தம்முள் கட்டியங்காரன் என்பான் - களிறுபோன்ற சச்சந்தனுக்கு அமைச்சர்களாகவுள்ளவர்களிற் கட்டியங்காரன் என்பவன் ; ஒளிறுவாள் தடக்கை யானுக்கு உயிரென ஒழுகும் நாளுள் - விளங்கும் வாளேந்திய