பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1091 

1928 முழையுறை சிங்கம் பொங்கி
  முழங்கிமேற் பாய்ந்து மைதோய்
வழையுறை வனத்து வன்க
  ணரிவலைப் பட்ட தன்றே.

   (இ - ள்.) முழையுறை சிங்கம் மைதோய் வழையுறை வனத்து பொங்கி முழங்கிமேற் பாய்ந்து - குகையில் இருந்த சிங்கம் இடமறியாமல் முகில் தங்கும் வழை பொருந்திய காட்டிலே கிளர்ந்து ஆரவாரித்து (நரியின்)மேற் பாய்ந்து; வன்கண் நரி வலைப்பட்டது அன்றே? - கொடிய அந் நரியாகிய வலையிலே அகப்பட்டுக் கொண்டது அன்றோ?; (ஆகையால்) இழை பொறை ஆற்றகில்லாது இட்டிடை தளர நின்ற - அணிகலன்களைச் சுமக்கமாட்டாது நுண்ணிடை சோர நின்ற; குழை நிற முகத்தினார் போல் - குழையணிந்த ஒள்ளிய முகமுடைய மகளிரைப்போல; குறித்ததே துணிந்து செய்யார் - யாம் வீரமுடையேம் என்று நினைத்ததை (காலம் இடம் உணராமல்) நினைத்த படியே செய்ய முற்படார்.

   (வி - ம்.) 'மடம் பாடல்' என்பது, 'மடப்படல்' என வந்தது விகாரம் 'காலாழ் களரின் நரியடும்' (குறள். 50) என்றார் தேவர்.

( 40 )
1929 ஊழிவாய்த் தீயொ டொப்பான்
  பதுமுக னுரைக்கு மொன்னா
ராழிவாய்த் துஞ்ச மற்றெம்
  மாற்றலா னெருங்கி வென்று
மாழைநீ ணிதியந் துஞ்சு
  மாநிலக் கிழமை யெய்தும்
பாழியாற் பிறரை வேண்டேம்
  பணிப்பதே பாணி யென்றான்.

   (இ - ள்.) ஊழி வாய்த் தீயொடு ஒப்பான் பதுமுகன் உரைக்கும் - ஊழிக் காலத்தீயைப் போன்றவனாகிய பதுமுகன் கூறுவான்; ஒன்னார் ஆழிவாய்த் துஞ்ச - பகைவர் கடலிலேபட; எம் ஆற்றலால் நெருங்கி வென்று - எம் வல்லமையால் அடர்த்து வென்று; மாழை நீள் நிதியம் துஞ்சம் மாநிலக்கிழமை எய்தும் - பொன் மிகுந்த செல்வம் தங்கிய பெருநில ஆட்சியை அடைவோம்; பாழியால் பிறரை வேண்டோம் - வலிமையால் மற்றவரை நாடுகிலேம்; பணிப்பதே பாணி என்றான் - அடிகளின் அருளே தடையாகும் என்றான்.

   (வி - ம்.) எய்தும் : தன்மைப் பன்மை வினைமுற்று. 'பாழியேம்' என்றும் பாடம்.