பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1093 

1932 நன்றப் பொருளே வலித்தேன்மற் றடிக ணாளைச்
சென்றப் பதியு ளெமர்க்கேயேன துண்மை காட்டி
யன்றைப் பகலே யடியேன்வந் தடைவ னீமே
வென்றிக் களிற்று னுழைச்செல்வது வேண்டு மென்றான்.

   (இ - ள்.) அடிகள்! - அடிகளே!; நன்று - கூறியது நல்லது; அப்பொருளே வலித்தேன் - நீர்கூறிய பொருளையே யானும் துணிந்தேன்; மற்று - இனி; நாளைச் சென்று - நாளைக்குப் போய்; அப் பதியுள் எமர்க்கே எனது உண்மை காட்டி - இராசமாபுரத்தே எம் சுற்றத்தார்க்கு மட்டும் யான் உயிருடன் இருப்பதை அறிவித்துவிட்டு; அன்றைப் பகலே அடியேன் வந்து அடைவல் - அன்றையத்தினமே அடியேன் மாமனிடம் வந்து சேர்வேன்; வென்றிக் களிற்றானுழை நீம் செல்வது வேண்டும் என்றான் - வென்றிக் களிற்றையுடைய மாமனிடம் நீர் செல்லுதல் வேண்டும் என்று சீவகன் கூறினான்.

   (வி - ம்.) 'கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும்' (தொல். குற்றியலுகரம். 78) என்றதனால், நும் என்னுஞ்சொல் நீயிரென முழுவதுந் திரியாது, மகரம் நிற்பத் திரிந்து 'நீம்' என நின்றது; இனி, நீ மென்பது ஒருதிசைச் சொல்லுமாம்; ஏகாரம் : பிரிநிலை என்பர் நச்சினார்க்கினியர். நீம் என்பது திசைச்சொல் என்பதே பொருந்தும்.

   மற்றும் அவர் 'இளையவண் மகிழ்வ கூறி' (சீவக. 2101) என்னுஞ் செய்யுளானும் 'வீட்டகந்தோறும்' (சீவக. 2610) என்னுஞ் செய்யுளானும், 'அன்றைப் பகலே வருவேன்' என்றல் பொருந்தாமை யுணர்க என்றுகூறி, 'ஒருநாளிலிருந்து மற்றைநாளே போந்து அடியேன் அடைவேன்' என்றும் பொருள் கூறுவர்.

( 44 )
1933 வேற்றைவந் தன்ன நுதிவெம்பாற் கான முன்னி
நூற்றைவ ரோடு நடந்தாணுதி வல்வின் மைந்தன்
காற்றிற் பரிக்குங் கலிமான் மிசைக் காவ லோம்பி
யாற்றற் கமைந்த படையோடதர் முன்னி னானே.

   (இ - ள்.) வல்வில் மைந்தன் காற்றின் பரிக்கும் கலிமான் மிசைக் காவல் ஓம்பி - வலிய வில்லேந்திய சீவகன் காற்றைப் போலச் செல்லும் குதிரைகளின் மேற் படைகளைக் காவலிட; வேல் தைவந்தன்ன நுதி வெம்பரல் கானம் முன்னி - வேலைத் தொட்டாற்போன்ற நுனிகளையுடைய கொடிய பரல்களையுடைய காட்டின் வழியே செல்ல எண்ணி; நூற்றைவரோடு நுதி நடந்தாள் - நூற்றைந்து மகளிருடனே (மகன் செல்வதற்கு) முன்னே சென்றாள்; ஆற்றற்கு அமைந்த படையோடு அதர் முன்னினான் - (பிறகு) ஆற்றலையுடைய படைகளுடன் தான் செல்லவேண்டிய வழியிலே செல்லத் தொடங்கினான்.