பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1094 

   (வி - ம்.) நுதி - முன்பு என்றும் பொருள்படும். 'மதியேர் நுதலார் நுதிக் கோலஞ் செய்து' (சிற். 360) என்றாற்போல. ஓம்பி - ஓம்ப : எச்சத்திரிபு.

   பகைவர்க்கஞ்சி அவன் படையைக் காவலிட்டபின்பு, விசயைதான் தனக்குக் காவலாகத் தன்னைப்போல நோன்பு கொண்ட மகளிராய்ப் பள்ளியிலுறைவார் நூற்றைவரோடு போனாள். தவஞ் செய்வார் தனியே போதல் மரபன்றென்று. இனி, வல்வின் மைந்தன் முன்பு படையோடே மான் மிசையிலே ஏறி அதரை முன்னினவன் தேவிக்குக் காவல் ஓம்ப, அவள் நோன்பு கொண்ட மகளிர் நூற்றைவரோடே நடந்தாள் என்றுமாம். இனி 'நடந்தான்' என்று பாடம் ஓதி, முன்பு படையோடே அதர் முன்னினவன், மாமிசையிலுள்ளாரைத் தேவிக்குக் காவலாக ஓம்பித் தான் நூற்றைவரோடும் போனான் என்பாருமுளர்.

( 45 )
1934 மன்றற் கிடனா மணிமால்வரை மார்பன் வான்க
ணின்றெத் திசையு மருவிப்புன னீத்த மோவாக்
குன்றுங் குளிர்நீர்த் தடஞ்சூழ்ந்தன கோல யாறுஞ்
சென்றப் பழனப் படப்பைப்புன னாடு சோ்ந்தான்.

   (இ - ள்.) மன்றற்கு இடன் ஆம் மணிமால் வரை மார்பன் - மணத்திற்கு இடனாகிய மணிகளையுடைய பெரிய மலைபோலும் மார்பனாகிய சீவகன்; வான் கண் நின்று - வான் தன்னிடத்தே மாறாது பெய்தலின்; எத் திசையும் மருவிப் புனல் நீத்தம் ஓவா - எத் திசையினும் பொருந்தி நீர்ப்பெருக்குக் குறையாத; குன்றும் - குன்றையும்; குளிர் நீர்த்தடம் சூழ்ந்தன கோலயாறும் - குளிர்ந்த நீரையுடைய குளங்களைச் சூழக் கொண்ட அழகிய யாற்றையும்; சென்று - கடந்து; அப் பழனம் படப்பை புனல்நாடு சேர்ந்தான் - அவ் வயல்களையும் தோட்டங்களையும் நிரையும் உடைய அந்த ஏமாங்கதத்தைச் சேர்ந்தான்.

   (வி - ம்.) மன்றல் - திருமணம். இடனாய் என்பது ஈறுகெட்டு நின்றது. வான்கண் நின்று என்புழிச் செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாகக் கொள்க. வான் : ஆகுபெயர். கண் - இடம், சூழ்ந்தன : முற்றெச்சம். படப்பை - தோட்டம்.

( 46 )

வேறு

1935 காவின்மேற் கடிமலர் தெகிழ்ந்த நாற்றமும்
வாவியு ளினமல ருயிர்த்த வாசமும்
பூவிரி கோதையர் புனைந்த சாந்தமு
மேவலாற் கெதிரெதிர் விருந்து செய்தவே.

   (இ - ள்.) காவின்மேல் கடிமலர் தெகிழ்ந்த நாற்றமும் - காவிலுள்ள மணமலர்கள் நெகிழ்ந்த மணமும்; வாவியுள் இனமலர் உயிர்த்த வாசமும் - பொய்கையில் திரளாகிய மலர்கள்