பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1097 

   (இ - ள்.) எரிமணி இமைத்தன - (அந்த அந்திநேரத்தில்) எரிபோன்ற மணிகள் ஒளிர்ந்தன; தீ புகை எழுந்த - இனிய அகிற்புகை எழுந்தன; புரிநரம்பு இரங்கின - முறுக்குற்ற நரம்புகள் ஒலித்தன; தீ குழல் புகன்ற - இனிய வேய்ங்குழல் இசைத்தன; திருமணி முழவமும் - அழகிய முழவமும்; செம்பொன் பாண்டிலும் - வெண்கலத் தாளமும்; அருமணியின் குரல் அரவம் செய்த - குதிரை மணியின் குரலுடன் ஒலித்தன.

   (வி - ம்.) சீவகன் தங்கியிருந்த பொழிலிற் குதிரைகளும் இருந்தன ஆதலால் குதிரைகட்குக் கட்டிய மணி கொள்ளப்பட்டது.

( 52 )
1941 தெளித்தவின் முறுவலம் பவளஞ் செற்றவாய்க்
களிக்கயன் மழைக்கணார் காமங் காழ்கொளீஇ
விளித்தவின் னமிர்துறழ் கீதம் வேனலா
னளித்தபின் னமளியஞ் சேக்கை யெய்தினான்.

   (இ - ள்.) தெளித்த இன்முறுவல் - விளங்கிய இனிய முறுவலையும்; பவளம் செற்ற வாய் - பவளத்தை வென்ற செவ்வாயினையும்; களிக் கயல் மழைக்கணார் - களிப்பையுடைய கயல் போலுங் குளிர்ந்த விழியையுடைய மகளிர்; காமம் காழ் கொளீஇ - காமத்தே உறுதிகொண்டு; விளித்த இன் அமிர்து உறழ் கீதம் - பாடிய இனிய அமுதத்தை வென்ற இசையை; வேனலான் அளித்தபின் - காமன்னைய சீவகன் பாராட்டிய பிறகு; அமளி அம் சேக்கை எய்தினான் - படுக்கையாகிய தங்குமிடத்தை அடைந்தான்.

   (வி - ம்.) 'காமங்காழ் கொளீஇ அமளியஞ் சேக்கை எய்தினான்' எனக் கூட்டுவர் நச்சினார்க்கினியர்.

( 53 )
1942 தீங்கரும் பனுக்கிய திருந்து தோள்களும்
வீங்கெழிற் றோள்களு மிடைந்து வெம்முலை
பூங்குளிர் தாரொடு பொருது பொன்னுக
வீங்கனங் கனையிரு ளெல்லை நீந்தினான்.

   (இ - ள்.) தீ கரும்பு அனுக்கிய - இனிய கரும்பினை வென்ற; திருந்து தோள்களும் - அழகிய (மகளிர்) தோள்களும்; வீங்கு எழில் தோள்களும் - பருத்த அழகிய (சீவகன்) தோள்களும்; மிடைந்து - பிணைதலாலே; வெம்முலை பூங்குளிர் தாரொடு பொருது பொன் உக - விருப்பூட்டும் முலைகள் தண்ணிய மலர்த்தாருடன் பொருது பூண்கள் சிந்தும்படி; ஈங்கனம் கனையிருள் எல்லை நீந்தினான் - இவ்வாறு பேரிருளின் எல்லையைச் சீவகன் கடந்தான்.