பக்கம் எண் :

பதிகம் 11 

   (இ - ள்.) முந்நீர்ப் படு சங்கு அலற முரசு ஆர்ப்ப - கடலில் தோன்றிய சங்கு ஒலிக்கவும் முரசு முழங்கவும் ; மூதூர்ச் செந்நீர்க் கடியின் விழவு ஆட்டினுள் - இராசமாபுரத்திற் புதுநீர் மிகுதியால் உண்டான விழாவின்கண் ஆடும் விளையாட்டினில் ; மைந்நீர் நெடுங்கண் இரு மங்கையர் - மைதீட்டிய தன்மையுள்ள நெடுங்கணார் இரு மங்கையர்கள்; தம்முள் மாறாய் இவை தோற்றனம் இந்நீர்ப் படியேம் என்ற ஆறும் - சுண்ணத்தாலே தமக்குள் மாறுபட்டு இவற்றில் தோற்றால் இப்புதுநீரில் ஆடோம் என்ற படியும்;

 

   (வி - ம்.) அலற ஆர்ப்ப விளையாடும் விளையாட்டென்க. கடி -மிகுதி (உரிச்சொல்). தேன் கொள் சுண்ணம் : ஒளியாலும் நாற்றத்தாலும் ஊற்றாலும் இனிமைகொண்ட சுண்ணம் (வாசனைப்பொடி.) தோற்றனம் : 'மோயினள் உயிர்த்த காலை' (அகநா - 5) என்றாற்போல வினையெச்சம் முற்றாய்த் திரிந்தது.

 

   செந்நீர் : சிவப்பாகிய நீர் : புதுநீர். இருமங்கையர் : குணமாலை, சுரமஞ்சரி.

( 7 )
13 சுண்ண முடைந்து சுரமஞ்சரி சோர்ந்து தோழி,
வண்ணந் நெடுங்கட் குணமாலையை வைது மாறிப்
புண்மேற் புடையிற் புகைந்தாணுரு வியாது நோக்காள்
கண்ணோக் குடைந்து கடிமாட மடைந்த வாறும்,

   (இ - ள்.) சுரமஞ்சரி சுண்ணம் உடைந்து சோர்ந்து - சுரமஞ்சரி யென்பவள் சுண்ணம் தோற்றலாலே சோர்வுற்று ; வண்ணம் நெடுங்கண் தோழி குணமாலையை மாறி வைது - அழகிய நெடுங்கண்ணாளாகிய தோழி குணமாலையைக் 1கண்ணற்றுச் சீவகனை மழை வள்ளல் என்று வைது; புண்மேல் புடையில் புகைந்து கண்நோக்கு உடைந்து - புண்ணின் மேல் புடையுண்டானாற்போல நெஞ்சம் அழன்று அழகுகெட்டு; ஆண் உருயாதும் நோக்காள் கடிமாடம் அடைந்த ஆறும் - ஆண்மக்கள் வடிவை ஓவியத்தும் பாராமற் கன்னியாமாடத்தை அடைந்த படியும்;

 

   (வி - ம்.) மாறி வைது என மாறிற்று , 'திங்களங்களதிர் (சீவக - 898) 'மாற்றம் ஒன்று' (சீவக - 899) என்னுஞ் செய்யுட்களை நோக்கி. புடை - துவாரம். கண்நோக்கு : அழகு. மழை வள்ளல் : மழை இடமறிந்து பெய்யாதது போலச் சீவகனும் குணமாலையின்பாற் காதல் கொண்டான் என்று சுரமஞ்சரி கருதினாள். யாதும் என்பதனால் ஓவியமும் எனப்பட்டது. கடி - காவல்.

( 8 )

1. 'கண்ணுற்று' என உ.வே.சாமிநாதையரவர்கள் பதிப்பில் உள்ளது பிரதி வழுவாக இருத்தல் வேண்டும், மாறி என்பதற்கு அது பொருளன்மையின். கண்ணற்று -மாறுபட்டு.