பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 110 

கையையுடைய மன்னனுக்கு உயிர்போலப் பழகிவரும் நாட்களில்; வேந்தன் வெளிறு இலாக் கேள்வியானைப் பிளிறுவார் முரசின் சாற்றிப் பெருஞ் சிறப்பு இயற்றி - அரசன் வெள்ளைத் தன்மையில்லாத கேள்வியையுடைய அவனுக்கு, ஒலிக்கும் முரசினால் நாட்டுக்கறிவித்துப் பெருஞ் சிறப்புகளை நல்கி; வேறு கொண்டிருந்து சொன்னான் - தனியே அழைத்து இருத்திக் கொண்டு கூறுகிறான்.

 

   (வி - ம்.) [நச்சினார்க்கினியர் ஒளிறுவாள் தடக்கையான் கட்டியங்காரனாகவும், வெளிறிலாக கேள்வியான் நிமித்திகன் என்னும் அமைச்சனாகவுங் கொண்டு மாட்டேற்றிப் பொருள் கூறுவர்.]

 

   அவர் கூறுவது : 'கோதனான்' (சீவக. 240) என்றும் 'கரிமாலை நெஞ்சினான்' (சீவக. 294) என்றும், 'கல்லா மந்திரி' (சீவக. 345) என்றும் மேற்கூறலின், கட்டியங்காரனை, 'வெளிறிலாக் கேள்வியான்' எனலாகாது; இனி இகழ்ச்சிக் குறிப்பு என்பாருமுளர்' என்பது.

 

   இக்கூற்றால் வெளிறிலாக் கேள்வியானைக் கட்டியங்காரன் எனவே இவருக்கு முந்திய உரையாசிரியர்கள் கூறினர் என்றும் அது 'இகழ்ச்சிக் குறிப்பு' என்று கருதினர் என்றும் அறியலாம். நிமித்திகன் என்ற பெயருடைய மந்திரி யொருவனைப் பின்னர் 'ஓர் நிமித்திகன்' (சீவக. 204) எனக் கூறுதலானும், இங்குப் பெயர் கூறாமையானும், ஆற்றொழுக்காகப் பொருள்கோடற் கியலாவழியே மாட்டேறு வேண்டுமாதலானும் கட்டியங்காரனெனக் கோடலே தக்கது.]

 

   மதச்செருக்காற் பாகன் தோட்டியை நீவுமாறுபோலக் காமக்களிப்பால் தன் அமைச்சர் கூற்றைக் கடத்தல் நோக்கிக், 'களிறனான்' என்றார். நிமித்திகன் கருமமே கூறுதலும் கட்டியங்காரன் அரசன் கருத்திற்கேற்ப ஒழுகுதலும் இரண்டற்குங் காரணம்.

( 171 )
201 அசைவிலாப் புரவி வெள்ளத் தரிஞ்சயன் குலத்துட் டோன்றி
வசையிலா வரத்தின் வந்தாள் வான்சுவை அமிர்த மன்னாள்
விசையையைப் பிரித லாற்றேன் வேந்தனீ யாகி வைய
மிசைபடக் காத்தல் வேண்டும் இலங்குபூண் மார்ப வென்றான்.

   (இ - ள்.) இலங்குபூண் மார்ப! - விளங்கும்பூண் அணிந்த மார்பனே! அசைவுஇலாப் புரவி வெள்ளத்து அரிஞ்சயன் குலத்துள் தோன்றி - தோலாத புரவிப்பெருக்கையுடைய அரிஞ்சயன் மரபிலே தோன்றி; வசையிலாள் வரத்தின் வந்தாள் - குற்றமற்றவளாய், என் முற்பிறவியில் வேண்டுகோளாலே பிறந்தவளும் ; வான்சுவை அமிர்தம் அன்னாள் விசயையை- சுவைமிகும் வானுலக அமிர்தம் போன்றவளும் ஆகிய விசயையை; பிரிதல் ஆற்றேன்-பிரியும் ஆற்றல் இலேன்; நீீ வேந்தன் ஆகி வையம் இசைபடக் காத்தல் வேண்டும் என்றான் - (ஆகையால்) நீ அரசனாகி உலகைப் புகழ்பெறக் காப்பாயாக என்று கூறினான்.