விமலையார் இலம்பகம் |
1104 |
|
|
1956 |
பந்துமைந்துற் றாடுவாள்ப ணைம்முலையிற் குங்குமஞ் | |
சுந்தரப்பொ டிதெளித்த செம்பொற்சுண்ணம் வாணுதற் | |
றந்துசுட்டி யிட்டசாந்தம் வேரின்வார்ந்தி டைம்முலை | |
யிந்திரதி ருவினெக்கு ருகியென்ன வீழ்ந்தவே. | |
|
(இ - ள்.) மைந்து உற்றுப் பந்தாடுவாள் - இங்ங்னம் வலிமையுற்றுப் பந்தாடுகின்றவளுடைய; வாள் நுதல் தந்து சுட்டி இட்ட சாந்தம் - ஒள்ளிய நெற்றியிலே கொண்டுவந்து சுட்டியாக இட்ட சாந்தும்; பணை முலையின் குங்குமம் - பருத்த முலையில் இட்ட குங்குமமும்; சுந்தரப்பொடி - சிந்துரப் பொடியும்; தெளித்த செம்பொன் சுண்ணம் - ஓட வைத்த பொற் சுண்ணமும்; வேரின் வார்ந்து - வியர்வையினாற் கரைந்தெர்ழுகி; முலையிடை இந்திர திருவில் நெக்கு உருகி என்ன - முலையிடையிலே இந்திர திருவில் நெகிழ்ந்துருகி ஒழுகினாற்போல; வீழ்ந்த - வீழ்ந்தன.
|
(வி - ம்.) மைந்து - வலிமை. ஆடுவாள் : வினையாலணையும் பெயர். வேரின் - வியர்வையினான். இந்திரதிருவில் - வானவில். பன்னிறமுடைமையால் இஃதுவமமாயிற்று.
|
( 68 ) |
1957 |
நன்மணிச்சி லம்பினோடு | |
கிண்கிணிந்ந கந்நகும் | |
மின்மலர்ந்த முல்லைமாலை | |
நக்கிமிக்கி றந்தெழுந்து | |
பொன்மலர்ந்த கோதைபந்து | |
பொங்கியொன்று போந்துபாய்ந்து | |
மின்மலர்ந்த வேலினான்முன் | |
வீதிபுக்கு வீழ்ந்ததே. | |
|
(இ - ள்.) நன்மணிச் சிலம்பினோடு கிண்கிணி நக - அழகிய மணிச் சிலம்பும் கிண்கிணியும் விளங்க; நகும் மின் - நகுகின்ற மின் போன்ற; பொன் மலர்ந்த கோதை பந்து ஒன்று; பொன்னணியுடன் மலர்ந்த கோதையாளின் பந்து ஒன்று; மலர்ந்த முல்லை மாலை நக்கி - மலர்ந்த முல்லை மாலையைத் தொட்டு; மிக்கு இறந்தெழுந்து - தன் வரையைக் கடந்து எழுந்து; பொங்கிப் போந்து பாய்ந்து - பொங்கி வந்து பாய்ந்து; வீதி புக்கு - தெரு விற்புகுந்து; மின் மலர்ந்த வேலினான் முன் வீழ்ந்தது - ஒளி மலர்ந்த வேலினான் முன் வீழ்ந்தது.
|
(வி - ம்.) நக - விளங்க. கிண்கிணி நகநகும் எனற்பாலது வண்ணம் நோக்கி நகரம் இரட்டித்துக் கிண்கிணிந் நகந்நகும் என நின்றது. மிக்கிறந்து தன் எல்லையைக் கடந்து சென்று. வேலினான்: சீவகன்.
|
( 69 ) |