பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1106 

   தையே பெற்றவள் ஆனாள் என்க. நச்சினார்க்கினியர், பந்திலே ஆர்வஞ் செய்து அவனைக் காண்டலின்' என இச் செய்யுளிலேயே சீவகனைக் கண்டதாக அமைப்பர். அதனாற் போதிய பயனின்று.

( 71 )
1960 நீர்தங்கு திங்கண் மணிநீணிலந் தன்னு ளோங்கிச்
சீர்தங்கு கங்கைத் திருநீர்த்தண் டுவலை மாந்திக்
கார்தங்கி நின்ற கொடிகாளையைக் காண்ட லோடு
பீர்தங்கிப் பெய்யா மலரிற்பிறி தாயி னாளே.

   (இ - ள்.) நீர் தங்கு திங்கள் மணிநீள் நிலம் தன்னுள் ஓங்கி - நீர் தங்கிய சந்திர காந்தக் கல்லாகிய நிலத்திலே வளர்ந்து; சீர் தங்கு கங்கைத் திருநீர்த் தண் துவலைமாந்தி - சிறப்புற்ற அழகிய கங்கை நீரின் குளிர்ந்த நீர்த் துளியைப் பருகி; கார்தங்கி நின்ற கொடி - பசுமை தங்கி நின்ற கொடி போல்வாள்; காளையைக் காண்டலோடு - (பந்தை நோக்குவாள்) சீவகனைக் கண்ட அளவிலே; பீர்தங்கிப் பெய்யாமலரின் பிறிது ஆயினாள் - பசலை பூத்துப பழம் பூப்போல வேறாயினாள்.

   (வி - ம்.) திங்கள்மணி - சந்திரகாந்தக்கல். திருநீர் - அழகியநீர். துவலை - துளி. கார் - பசுமை. கொடி : விமலை. காளையை : சீவகனை. பீர் - பசலை. பெய்யா மலர் - பழம்பூ.

( 72 )
1961 பெண்பா லவர்கட் கணியாய்ப்பிரி யாத நாணுந்
திண்பா னிறையுந் திருமாமையுஞ் சோ்ந்த சாயல்
கண்பாற் கவினும் வளையுங்கவர்ந்த திட்ட கள்வன்
மண்பா லிழிந்த மலரைங்கணை மைந்த னென்றாள்.

   (இ - ள்.) பெண்பாலவர்கட்கு அணியாய்ப் பிரியாத நாணும் - பெண்களுக்குப் பூணாகி நீங்காத நாணும்; திண்பால் நிறையும் - திண்ணிய நிறையும்; திரு மாமையும் - அழகிய மாமையும்; சேர்ந்த சாயல் - கூடிய சாயலையுடையாள்; கண்பால் கவினும் வளையும் கவர்ந்திட்ட கள்வன் - தன் கண்ணாலே என் அழகையும் வளையையும் கவர்ந்த கள்வன்; மண்பால் இழிந்த மலர் ஐங்கணை மைந்தன் என்றாள் - (வடிவுக்கொண்டு) நிலவுலகிலே வந்த, மலராகிய ஐங்கணையுடைய காமன் என்று கருதினாள்,

   (வி - ம்.) சாயல் : பண்பாகுபெயர்.

   நாணமே பெண்மைக்குப் பேரழகு தருவதாகலின், பெண்பாலவர்கட்கு அணியாய்ப் பிரியாத நாண் என்றார். நிறை - நெஞ்சினை நிறுத்தும் தன்மை. 'செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும், அறிவும் அருமையும் பெண்பாலான” என்றார் தொல்காப்பியனாரும் (தொல். 1115) நாணும், நிறையும், மாமையும், சாயலும், கவினும் வளையும் கவர்ந்திட்ட கள்வன் என்று பொருள் கொள்ளினும் பொருந்தும்.

( 73 )