பக்கம் எண் :

விமலையார் இலம்பகம் 1107 

1962 என்றா ணினைந்தா ளிதுபோலுமிவ் வேட்கை வண்ணஞ்
சென்றே படினுஞ் சிறந்தார்க்கு முரைக்க லாவ
தன்றா யரிதா யகத்தேசுட் டுருக்கும் வெந்தீ
யொன்றே யுலகத் துறுநோய்மருந் தில்ல தென்றாள்.

   (இ - ள்.) என்றாள் நினைந்தாள் - என்று கருதிய அவள் இவ்வாறு நினைந்தாள்; இவ் வேட்கை வண்ணம் இது போலும் - காதல் வேட்கையின் தன்மை இவ்வாறு போலும்; சென்றே படினும் சிறந்தார்க்கும் உரைக்கலாவது அன்றாய் - இறந்தே படினும் குரவர்க்குங் கூறத்தகுவது அன்றாய்; அரிதாய் - பொறுத்தற்கும் அரியதாய்; அகத்தே சுட்டு உருக்கும் வெந்தீ - உள்ளே நின்று சுட்டு உருக்குகின்ற கொடிய தீயாக இருந்தது; ஒன்றே உலகத்து உறுநோய் மருந்து இல்லது என்றாள் - இந்நோய் ஒன்றே உலகத்திலுள்ள நோய்களிலே வேறு மருந்தில்லாத நோயாயிருந்தது என்று கருதினாள்.

   (வி - ம்.) என்றாள் : வினையாலணையும் பெயர்; முற்றெச்சமாம். பண்டு கண்ட தின்மையால் ”இதுபோலும் இவ்வேட்கை வண்ணம்” என்றாள். ”புதுவோன் பின்றைப் போனதென் னெஞ்சம் இதுவோ அன்னை காமத்தியற்கை” என வரும் மணிமேகலை கூற்றையும் நினைக (மணி. 5 : 89 - 90). சிறந்தார் என்பதற்கு நட்பிற் சிறந்தார் எனப் பொருள் கூறுவதே பொருத்தம்£கும். குரவரிடத்திற் காமத்தியற்கை கூறுவது முறையன்று ஆதலின்.

( 74 )
1963 நிறையாது மில்லை நெருப்பிற்சுடுங் காம முண்டேற்
குறையா நிறையி னொருகுன்றியுங் காம மில்லை
பறையா யறையும் பசப்பென்று பகர்ந்து வாடி
யறைவாய்க் கடல்போ லகன்காம மலைப்ப நின்றாள்.

   (இ - ள்.) குறையா நிறையின் ஒரு குன்றியும் காமம் இல்லை - மகளிர்க்கு நிறை குறையாமல் நின்றால் ஒரு குன்றியளவும் காமம் இல்லை யாயிருந்தது; நெருப்பின் சுடும் காமம் உண்டேல் நிறை யாதும் இல்லை - நெருப்பெனச் சுடுகின்ற காமம் உண்டாயின் நிறை சிறிதும் இல்லையாயிற்று; பசப்புப் பறையாய் அறையும் என்று பகர்ந்து வாடி - (அதுவுமன்றி, அதனை மறைத்தாலும்) பசப்புப் பறைபோல் எடுத்துக் கூறுவதாயிருந்ததென்று கூறி வாடி; அறைவாய்க் கடல் போல் அகன் காமம் அலைப்ப நின்றாள் - ஒலியையுடைய கடல்போலப் பரவிய காமம் வருத்த நின்றாள்.

   (வி - ம்.) யாதும் - சிறிதும். காமமுண்டாயின் நிறையில்லை, நிறை உண்டாயின் காமமில்லை என்க. பறையா - பறையாக. பசப்புப் புறத்தார்க்கு உணர்த்தலின் பறை உவமமாயிற்று. அறை - முழக்கம்.

( 75 )