பக்கம் எண் :

  1125 

9. சுரமஞ்சரியார் இலம்பகம்

(கதைச் சுருக்கம்)

   சீவகனுடைய புதுமணக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்த தோழர்கள் அவனை நோக்கி, ”ஐய! நீ மணந்த நங்கையின் பெயர் கூறுக !” என்று வினாயினர். சீவகன் அவள் பெயர் விமலை என்றான். அதுகேட்ட தோழர் வியந்து ஐயன் காமனே என்றனர்; அதுகேட்ட புத்திசேனன், ”இது வியத்தற்குரிய தன்று. இவ்வூரிடத்தே ஆடவர் பெயர் கேட்பினும் வெகுள்வாளொரு நங்கையுளள்; சுரமஞ்சரி என்னும் அவள் காமனே தன்னெதிர் செல்லினும் காணாளாய் வெறுப்பள். அவளை மயக்கிச் சீவகன் மணம் புணர்வான் எனின் இவனை யான் 'காமதிலகன்' என்றே பாராட்டுவேன்” என்றனன். அதுகேட்ட சீவகன் ”புத்திசேன! நாளையே அவளை மயக்கிக் காமன் கோட்டத்தே கொணர்வல். அப்பொழுது நீ அக்கோட்டத்தே காமன் படிவத்தின் பின் மறைந்திருப்பாயாக,” என்று கூறிப் புறப்பட்டுச் சென்றான்.

   சென்ற சீவகன் கண்டோ ரிரங்கத் தகுந்த முதுபார்ப்பனப் படிவம் கொண்டு, தண்டூன்றி நடை தளர்ந்து கூனிக் குறுவுயிர்ப் புடையனாய்ச் சுரமஞ்சரியின் மாளிகை வாயிலை எய்தினன். இவனது வருகை கண்ட வாயின் மகளிர் இரக்கமுடையராய்ச் சுரமஞ்சரியின்பாற் சென்றுணர்த்தினர். அதுகேட்ட சுரமஞ்சரியும் இரக்கமுடையளாய் 'அத்தகைய முதுபார்ப்பானைக் காண்டலால் நம் நோன்பிற்கு இழுக்கொன்றுமில்லை யாதலால் அவனை வரவேற்று விருந்தூட்டல் நன்று' என எண்ணி விரைந்து வந்து அவ் வேதியனை வரவேற்றனள். முகமன் மொழிந்து, ”ஐய! நீயிர் இவண் வந்தது யாது கருதியோ?” என்று வினவினள்! அவன், ”யான் திருநீர்க் குமரியாட ஈண்டு வந்தேன்,” என்றனன். அவள், ”அதனாற் பயன் என்ன?” என்றனள். அவன் ”இம் மூப்பொழியும்,” என்றான். அதகேட்ட சுரமஞ்சரி நகைத்து இவர் பித்தர்போலும் என்று இரங்கி இவர் தம் பசி தீர்ப்பது அறமாம் என்று கருதி அம் முதுபார்ப்பானை அன்புடன் அழைத்தேகி அறுசுவை அடிசிலூட்டிப் போற்றி ஆண்டொர் பள்ளிமிசை அயர்வகலப் படுக்கச் செய்தனள்.

   படுத்திருந்த பார்ப்பனன் பின்னர் ஓர் அமுத கீதம் பாடினன். அதுகேட்ட மகளிர் வியந்து மயங்கினர். தோழிமார் ”இவர் கீதம் சீவகசாமியின் இன்னிசையையே ஒத்துளது.”