என்றனர். அதுகேட்ட சுரமஞ்சரி சீவகன் என்ற பெயர்கேட்ட அளவிலே, தோழியரை நோக்கி,” அன்புடையீர்! நாளையே காமன் கோட்டஞ் சென்று வழிபாடு செய்து யான் அக் காளையை விரைவில் எய்த முயல்வேன்,” என்றனள். அங்ஙனமே மறுநாள் சுரமஞ்சரி தோழியோடும் முதுபார்ப்பனனோடும் காமன் கோட்டத்தை அடைந்தனள். அந்தணனை அயலிலோர் அறையினுள் வைத்தனள்.
|
காமன் படிவத்தின் பின்புறத்தே புத்திசேனன் முன்னரே சென்று காத்திருந்தான். சுரமஞ்சரி தமியளாய்க் காமன் முன் சென்று, ”காமதேவா! நீ சீவகனை எனக்குத் தருவாயாயின் யான் நினக்கு மீன் கொடியும், மலரம்பும், கருப்புச் சிலையும் தேரும், ஊருந் தருகுவல்!” என வேண்டி நின்றனள். அத் தெய்வப் படிமத்தின் பின்னிருந்த புத்திசேனன், ”நங்காய்! நீ அச் சீவகனைப் பெற்றாய். விரைந்து சென்று அவனைக் காணுதி!” என்று விளம்பினன். அது தெய்வத்தின் தீங்குரலே என்று கருதினள் சுரமஞ்சரி. மீண்டுங் காமனை வணங்கி அந்தணனிருந்த அறைக்குட் சென்றாள். ஆண்டுச் சீவகன் தன்னுண்மை யுருவத்தொடு நின்றான். கண்ட மஞ்சரி துண்ணென மருண்டாள்; நாணினள். காளை அக்காரிகையைக் காதல் கூர்ந்து தழீஇயினான். நாளை மணப்பேன் என்று உறுதி கூறி விடுத்தனன்.
|