பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 113 

205 எனக்குயி ரென்னப் பட்டா னென்னலாற் பிறரை யில்லான்
முனைத்திற முருக்கி முன்னே மொய்யமர் பலவும் வென்றான்
றனக்கியான் செய்வ செய்தேன் தான்செய்வ செய்க வொன்று
மனக்கினா மொழிய வேண்டா வாழிய ரொழிக வென்றான்.

   (இ - ள்.) எனக்கு உயிர் என்னப் பட்டான் - என் உயிர் போன்றவன்; என் அலால் பிறரை இல்லான் - என்னையன்றி மற்றவரை நட்புறாதவன்; முன்னே முனைத்திறம் முருக்கி மொய் அமர் பலவும் வென்றான் - இச் சிறப்பை அவன் பெறுதற்கு முன்னேயே போர்க்களங்களின் அணிவகுப்பு முதலிய கூறுபாடுகளை அழித்துச் சிறந்த போர் பலவினும் வெற்றியுற்றான்; தனக்கு யான்செய்வ செய்தேன் - (ஆகையால்) அவனுக்கு நான் செய்யுங் கடமைகளைச் செய்தேன்; தான் செய்வ செய்க - அவன் தனக்கு விருப்பமானவற்றைச் செய்துகொள்க; ஒன்றும் மனக்கு இனாமொழிய வேண்டா - நீ சிறிதும் மனத்திற்குத் தீமை தரும்பொறாமைச் சொற்களைச் சொல்லவேண்டா; வாழியர் - நீயும் நின்னிலையிலே நில்; ஒழிக என்றான் - இனி இம்மொழியைத்தவிர்க என்றுரைத்தான்.

 

   (வி - ம்.) என்னலாற் பிறரை யில்லான் : இன்மை உடைமைக்கு மறுதலை. 'வென்றான்' எனவே நடத்துதற்குரியவன் என்றான். நன்மையுந் தீமையும் கருதிச் செய்வ எனப் பன்மையாற் கூறினார்.

( 176 )
206 காவல குறிப்பன் றேனுங் கருமமீ தருளிக் கேண்மோ
நாவலர் சொற்கொண் டார்க்கு நன்கலாற் றீங்கு வாரா
பூவலர் கொடிய னார்கட் போகமே கழுமி மேலும்
பாவமும் பழியு முற்றார் பற்பலர் கேளி தென்றான்.

   (இ - ள்.) காவல! நாவலர் சொற்கொண் டார்க்கு நன்கு அலால் தீங்கு வாரா - அரசே! அமைச்சர் சொற்கேட்டவர்க்கு நன்மையே அல்லாமல் தீமைகள் வாரா; குறிப்பு அன்றேனும் அருளிக் கேண்மோ - திருவுளம் இன்றேனும் அருள்கூர்ந்து கேட்க; ஈது கருமம் - ஒருவன்பால் அரசுரிமையை நல்காதிருப்பது காரியம்; (என்றான். அதற்கு உடம்படாமையின்) பூஅலர் கொடியனார்கண் போகமே கழுமிப் பாவமும் பழியும் உற்றார் மேலும் பற்பலர் இதுகேள் என்றான் - மலர் மலர்ந்த கொடியனைய மங்கையர்பால் இன்பமே கொண்டு மயங்கிப் பாவமும் பழியும் அடைந்தோர் நின்னை ஒழிய முன்னும் பற்பலர் உளராயினர்; இதனைக் கேள் என்றான்.

 

   (வி - ம்.) நாவலர் - அமைச்சர்; கழுமி - மயங்கி. 1இஃது உலகியலாற் கூறினான். மேற்கூறுவன வெல்லாம் போகத்தையே நோக்குதலின், இதுவென ஒருமையாற் கூறினான்.

( 177 )

1. அமைச்சர் சொற்கேட்டால் அரசனுக்குத் தீங்கு வாராதென்பது.