பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 114 

207 பெரும்பெயர்ப் பிரம னென்னும் பீடினாற் பெரிய நீரா
னரும்பிய முலையி னாளுக் கணிமுக நான்கு தோன்ற
விரும்பியாங் கவளை யெய்தான் விண்ணக மிழந்த தன்றித்
திருந்தினாற் கின்று காறுஞ் சிறுசொல்லாய் நின்ற தன்றே.

   (இ - ள்.) பெரும்பெயர்ப் பிரமன் என்னும் பீடினாற் பெரிய நீரான் - பெரும்புகழ் பெற்ற பிரமன் என்னும் தவத்தாற் பேரியல்பு பெற்றவன்; அரும்பிய முலையினாளுக்கு - அரும்பனைய முலைகளையுடைய திலோத்தமையின் பொருட்டு; அணிமுகம் நான்கு தோன்ற விரும்பிஆங்கு அவளை எய்தான் - அழகிய முகங்கள் (முன்னிருந்த முகமன்றி) நான்கு தோன்ற விரும்பி நோக்கியும் அவளை ஆங்கு அடைய முடியாமல்; விண் அகம் இழந்தது அன்றி - வானுலகை இழந்ததோடு நில்லாமல்; திருந்தினாற்கு இன்றுகாறும் சிறுசொல்லாய் நின்றது - பின் தவத்தால் திருந்திய அவனுக்கு இன்றுவரையிற் பழிச்சொல்லாய் நின்றதல்லவோ?

 

   (வி - ம்.) பெயர் - புகழ். அன்றே : ஏ வினா. முறைசெய்யாமையின் தன்னிலை யிழந்தான். 'தோற்றி' என்றும் பாடம்.

 

   நான்முகம் தோன்றியது : பிரமனுக்கு அரம்பையரிடத்துக் காமம் உண்டாயிற்று. அவர்கள் இணங்காமையால், அவர்களை அடைதற்குரிய இந்திர பதவியை வேட்டுத் தவம் புரிந்தான். மூன்றரைக் கோடி ஆண்டுகள் கடந்தன. இந்திரன் தன் பதவிக்கு வேறொருவன் வர விருப்பமில்லாமையாற் பிரமன் தவத்தை அழிக்கத் திலோத்தமை என்னும் அரம்பையை அனுப்பினான். அவள் பிரமன் எதிரில் வந்து ஆடல் பாடலால் ஒருபுறம் நின்று மயக்கினாள். பிரமன் விழித்துப் பார்த்தான். இவள் மற்றொரு புறம் சென்று ஆடினாள். அப்புறம் திரும்பினாற் பிறதவமுனிவர்கள் இகழ்வார்கள் என்று நினைத்துத் தன் ஒரு கோடி ஆண்டின் தவச்சிறப்பால் அவளிருந்த பக்கம் ஒரு முகம் உண்டாக்கி நோக்கினான். அவள் மறுபுறம் சென்றாள். அங்கும், மற்றொரு புறத்திலும் அவ்வாறே மற்றும் இரண்டு கோடி ஆண்டின் தவச்சிறப்பால் இரு முகமும் உண்டாக்கிக்கொண்டு இயற்கையான ஒரு முகத்துடன் நான் முகனாகி அவள் சென்ற திசையெலாம் நோக்கினான். அவள் வானிலே நின்று ஆடினாள். அரைக்கோடி ஆண்டின் தவச்சிறப்பால் மேனோக்கிய முகமொன்றும் அமைத்துக்கொண்டான். அவள் மறைந்தாள். காமத்தை அடக்கவியலாத பிரமன் ஐம்முகங்களுடன் வானவழியே செல்லும் தெய்வ மங்கையரை வலிதிற் பற்றித் துன்புறுத்தினான். வானவர் வேண்டுகோளாற் சதாசிவமூர்த்தி பிரமனுடைய மேனோக்கிய தலையைக் கிள்ளியெறிய, நான்முகனாகிய அவன் எல்லோராலும் பழிக்கப்பட்டுத் தன் பதவியையும் இழந்தான் - இவ்வாறு தர்ம பரீ¬க்ஷ என்றும் சைனநூலில் மூன்றாம் படலத்திற் கூறப்படுவதாக டாக்டர் உ.வே. சாமிநாதயைரவர்களின் பதிப்பிற் கூறப்படுகிறது.

 

   சைவ நூல்களில் இதற்கு வேறான கதைகள் கூறப்படுகின்றன.

( 178 )