பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1140 

   கொண்ட நோன்பைக் கெடுத்துக் கூடுந்துறை இம் மூப்பால் என்றறிந்து நின்னையணுகிக் கூடுவார் என்னையொழிய இலர்) என்று கூறியவற்கு; பிற நீவிர் அறிதிர் என - உலகத்தார் அறியாத வேறொரு துறையை நீவிர் அறிவீரோ என்று இகழ்ந்து கூற; ஐயம் இலை என்றான் - அதற்கு ஐயம் இல்லை என்றான்.

( 27 )
 
2022 செத்தமர மொய்த்தமழை யாற்பெயரு மென்பார்
பித்தரிவ குற்றபிணி தீர்த்துமென வெண்ணி
யத்தமென மிக்கசுட ரங்கதிர்சு ருக்கு
மொய்த்தமணி மாடமிசை யத்தகவ டைந்தாள்.

   (இ - ள்.) செத்த மரம் மொய்த்த மழையால் பெயரும் என்பார் - செத்த மரம் ஒன்று பெரிய மழையால் உயிரைப் பெறும் என்பாராகிய; இவர் பித்தர் - இவர் பித்தராவார்; உற்ற பிணி தீர்த்தும் என எண்ணி - இனி இவர் உற்ற பசிநோயை நீக்குவோம் என்று நினைத்து; அத்தம் என மிக்கசுடர் அமகதிர் சுருக்கும் - இஃது அத்தகிரி யென்று ஞாயிறு தன் அழகிய கதிரைச் சுருக்குகின்ற; மொய்த்த மணிமாடமிசை அத்தக அடைந்தாள் - மிகுந்த அழகையுடைய மாடத்தின்மேல் அழகுறச் சென்றாள்.

   (வி - ம்.) (குமரியாட) முந்தி நலிகின்ற முதுமூப்பு ஒழியும் என்று சீவகன் கூறியதற்கு, 'செத்தமரம் மொய்த்த மழையாற் பெயரும்' என்றல், உவமை. தீர்த்தும் : தன்மைப்பன்மை. எனவே இவனைக் கொண்டு போந்தாளாம்.

( 28 )
2023 வடிவமிது மூப்பளிது வார்பவள வல்லிக்
கடிகைதுவர் வாய்கமலங் கண்ணொடடி வண்ணங்
கொடிதுபசி கூர்ந்துளது கோல்வளையி னீரே
யடிசில்கடி தாக்கியிவ ணேகொணர்மி னென்றாள்.

   (இ - ள்.) கோல் வளையினீரே! - திரண்ட வளையணிந்த பெண்களே!; துவர்வாய் வார் பவள வல்லிக்கடிகை - சிவந்த வாய் நீண்ட பவளக்கொடி துணித்ததாய்; கண்ணொடு அடி வண்ணம் கமலம் - கண்ணும் அடியும் கமலமாயிருக்கின்ற; இது வடிவம் மூப்பு - இவ் வடிவம் முதுமையுடையது; அளிது - எனவே, நமக்கு அளிக்கத்தக்கது; கொடிது பசி கூர்ந்துளது - கொடியதான பசி மிகுந்துளது; அடிசில் கடிது ஆக்கி இவணே கொணர்மின் என்றாள் - உணவை விரைவாக ஆக்கி இங்கேயே கொண்டு வருக என்றாள்.