பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1141 

   (வி - ம்.) அளிது - அளிக்கத்தக்கது. வடிவம் என்றதற் கேற்பப் பசிகூர்ந்துளது என்றான். உண்ணுமிடத்திற்குச் செல்லுதலும் இவர்க்கியலாதென்பாள் இவணே கொணர்மின் என்றும், இன்னும் சிறிதுபொழுதும் இவர் பசிபொறுத்தல் அரிதென்பாள் கடிதாக்கி என்றும் கூறினாள்.

( 29 )
2024 நானமுரைத் தாங்குநறு நீரவனை யாட்டி
மேனிகிளர் வெண்டுகிலும் விழுப்பொனிய னூலும்
பானலங்கொ டீங்கிளவி பவித்திரமு நல்கத்
தானமர்ந்து தாங்கியமை தவிசின்மிசை யிருந்தான்.

   (இ - ள்.) பால் நலம்கொள் தீ கிளவி - பாலின் தன்மையைக் கொண்ட இனிய மொழியினாள்; ஆங்கு அவனை நானம் உரைத்து நறுநீர் ஆட்டி - அப்போதே அவனை மணமுறும் எண்ணெயைத் தேய்த்து நல்ல நீரால் ஆட்டுவித்து; மேனிகிளர். வெண்துகிலும் - மெய்விளங்கும் வெள்ளை ஆடையையும்; விழுப்பொன் இயல் நூலும் - சிறந்த பொன்னால் இயன்ற நூலையும்; பவித்திரமும் - மோதிரத்தையும்; நல்க - கொடுக்க; தான் அமர்ந்து தாங்கி - அவன் அமர்ந்து அவற்றை அணிந்து; அமைதவிசின் மிசை இருந்தான் - இட்ட தவிசின் மேலே இருந்தான்.

   (வி - ம்.) நானம் - மணவெண்ணெய். ஆங்கு - அப்பொழுதே. மேனி - நிறம், விழுப்பொன் இயல் நூல் - சிறந்த பொன்னாலியற்றிய பூணூல். பாலின் சுவையைத் தன்பாற்கொண்ட இனிய மொழியையுடைய சுரமஞ்சரி என்க. பவித்திரம் - மோதிரம்.

( 30 )
2025 திங்கணலஞ் சூழ்ந்ததிகு மீன்களெனச் செம்பொற்
பொங்குகதிர் மின்னுபுகழ்க் கலங்கள்பல பரப்பி
யிங்குசுவை யின்னமுத மேந்தமிகு சான்றோ
னெங்குமிலை யின்னசுவை யென்றுடன யின்றான்.

   (இ - ள்.) திங்கள் நலம் சூழ்ந்த திருமீன்களென - திங்களை நலத்தோடு சூழ்ந்த அழகிய விண்மீன்களென்ன; பொங்கு கதிர் மின்னு செம்பொன் புகழ்க்கலங்கள் பரப்பி - மிகுந்த ஒளியை வீசும் பொன்னாலாகிய சிறந்த உண்கலங்களைப் பரப்பி; இங்கு சுவையின் அமுதம் ஏந்த - தங்கிய இடத்தில் அறுசுவையையுடைய உணவை மகளிர் ஏந்த; மிகுசான்றோன் - சீவகன்; இன்ன சுவை எங்கும் இலை என்று உடன் அயின்றான் - இத்தகைய சுவை எங்கும் உண்டதில்லை யென்று வியந்து, வியப்புடனே அயின்றான்.

   (வி - ம்.) திங்களும் அதனைச் சூழ்ந்த மீன்களும் உண்கலங்கட்குவமை. இங்கு - தங்கிய இடம். சான்றோன் : சீவகன், இன்ன சுவை - இத்தன்மைத்தாய சுவை. அயின்றான் - உண்டான்.

( 31 )