சுரமஞ்சரியார் இலம்பகம் |
1142 |
|
|
2026 |
தமிழ்தழிய சாயலவர் தங்குமலர்த் தூநீ | |
ருமிழ்கரக மேந்தவுர வோனமர்ந்து பூசி | |
யமிழ்தனைய பஞ்சமுக வாசமமைத் தாய்ந்த | |
கமழ்திரையுங் காட்டவவை கொண்டுகவு ளடுத்தான். | |
|
(இ - ள்.) தமிழ் தழிய சாயலவர் - இனிமை பொருந்திய சாயலையுடையவர்; மலர்தங்கு தூநீர் உமிழ்கரகம் ஏந்த மலர் தங்குந் தூய நீரை வார்க்கும் கரகத்தை ஏந்த; உரவோன் அமர்ந்து பூசி - சீவகன் விரும்பி வாய்பூசி; அமிழ்து அனைய பஞ்சமுக வாசம் அமைத்து ஆய்ந்த - அமிழ்து போன்ற ஐந்து வகைப்பட்ட முகவாசத்தைக் கூட்டி ஆய்ந்த; கமழ்திரையும் காட்ட - மணமிகு வெற்றிலையையும் காட்ட அலை கொண்டு கவுள் அடுத்தான் - அவற்றை வாங்கிக்கொண்டு கவுளில் சேர்த்தான்.
|
(வி - ம்.) தமிழ் - இனிமை. தழிய - தழுவிய. உரவோன் : சீவகன். பூசி - வாய்பூசி. பஞ்சமுகவாசம் - ஐந்துவகைப்பட்ட முகவாசம், திரை - வெற்றிலை.
|
( 32 ) |
2027 |
வல்லதெனை யென்னமறை வல்லன்மட வாயா | |
னெல்லையெவ னென்னப்பொரு ளெய்திமுடி காறுஞ் | |
சொல்லுமினு நீவிர்கற்ற காலமெனத் தேன்சோர் | |
சில்லென்கிளிக் கிளவியது சிந்தையில னென்றான். | |
|
(இ - ள்.) வல்லது எனை என்ன - நீர் கற்று வல்லது என் என்று சுரமஞ்சரி வினவ; மடவாய்! யான மறைவல்லன் - பெண்ணே! யான் மறைவான உருவங்கொள்வதிலே வல்லன் என்று சீவகன் கூற; எல்லைஎன என்ன - (அவள் வேதத்திலே வல்லனென்று கூறுவதாக எண்ணி) நீர் கற்ற அளவு எவ்வளவு என்று வினவ; பொருள் எய்தி முடிகாறும் - நினைத்த பொருளை அடைந்து முடியும் அளவும் என்று அவன் விடைகூற; இனும் நீவிர் கற்றகாலம் சொல்லும் என - (அவள் அதனை வேதம் தான் கருதிய தத்துவத்தை முற்ற உணர்த்தி முடியும் அளவும் என்றானாகக் கருதி) இன்னும் நீவிர் கற்ற காலத்தைக் கூறும் என்று வினவ; தேன்சோர் சில் என் கிளிக் கிளவி! அது சிந்தையிலன் என்றான் - தேன் வழியும் தண்ணெனும் கிளி மொழியாய்! அக்காலங் கூற நினைவிலேன் என்றான்.
|
(வி - ம்.) என்றது : மேலும் வினாவும் விடையும் பெருகுதல் கருதி, அஃது எனக்குக் கருத்தன்றென்றான்; அவள் அதனை நினைத்திருந்திலேன் என்றானாகக் கருதினாள் எனை : என்னை என்னும் வினா, னகர மெய்கெட்டு நின்றது. தொகுத்தல் விகாரம்.
|
( 33 ) |