பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1143 

2028 இன்னவர்க ளில்லைநிலத் தென்றுவியந் தேத்தி
யன்னமன மென்னடையி னாளமர்ந்து நோக்கப்
பின்னையிவள் போகுதிறம் பேசுமென வெண்ணித்
தன்னஞ்சிறி தேதுயின்று தாழவவ ணக்காள்.

   (இ - ள்.) நிலத்து இன்னவர்கள் இல்லை என்று வியந்து ஏத்தி - இந் நிலத்திலே இத் தன்மையுடையவர்கள் இல்லை என்று வியந்து புகழ்ந்து; அன்னம் அனமெல் நடையினாள் அமர்ந்து நோக்க - அன்னம்போலும் மெல்லிய நடையினாள் விரும்பிப் பார்க்க; பின்னை இவள் போகுதிறம் பேசும் என எண்ணி - இனி, இவள் நம்மைப் போமாறு கூறுவாள் என்று கருதி; தன்னம் சிறிதே துயின்று தாழ அவள் நக்காள் - மிகவும் சிறிதே துயின்று தலை தாழ, அவள் அதுகண்டு நகைத்தாள்.

   (வி - ம்.) இன்னவர்கள் - இத்தன்மையுடையோர். அன்ன - அன என நின்றது. அமர்ந்து - விரும்பி போகுதிறம் - போதற்குரிய சொற்கள். தன்னஞ்சிறிது : ஒருபொருட் பன்மொழி.

( 34 )
2029 கோலமணி வாய்க்குவளை வாட்கண்மட வாளைச்
சாலமுது மூப்புடைய சாமிமுக நோக்கிக்
காலுமிக நோஞ்சிறிது கண்ணுந்துயில் குற்றே
னேலங்கமழ் கோதையிதற் கென்செய்குரை யென்றான்.

   (இ - ள்.) கோல மணிவாய் - அழகிய முத்தனைய பற்களையுடைய வாயையும்; குவளை வாட்கண் - குவளைபோலும் ஒளி பொருந்திய கண்களையும் உடைய; மடவாளை - சுரமஞ்சரியை; சாலமுது மூப்பு உடைய சாமி முகம் நோக்கி - மிகவும் முதிய மூப்பினையுடைய சீவகசாமி பார்த்து; காலும் மிகநோம் - (நடையினாற்) கால்களும் மிக நோகின்றன; கண்ணும் துயில் குற்றேன் - கண்களும் உறங்கலுற்றேன்; ஏலம் கமழ்கோதை! - ஏலங்கமழுங் கோதையாய்!; இதற்கு என்செய்கு? உரை என்றான் - இதற்கு யாது செய்வேன்? கூறு என்றான்.

   (வி - ம்.) 'காலும் மிகநோம்' - வாடைக்காற்றும் மிக வருத்தும்; வாடைக்காற்றைக் கூறியதனால் இத் திங்கள் கார்த்திகையாகும். கண்ணும் துயில்குற்றேன் 'இறந்துபடும் நிலையை அடைந்தேன்' என்ற உட்பொருளுடன் கூறினான்.

   'கண்ணிமைப்பளவும்' என்றது உயிருடன் இருத்தலை உணர்த்தல் போலக், கண் துயிலுதலும் இறந்துபாட்டை உணர்த்திற்று.

   சாமி : சீவகசாமி. துயில்குற்றேன் : துயின்றேன் என்னும் ஒரு சொல். ஏலம் - மயிர்ச்சாந்தம். கோதை : விளி. செய்கு : தன்மையொருமை எதிர்கால வினைமுற்று.

( 35 )