பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1148 

   (இ - ள்.) தாம மாலை வார்குழல் தடங்கணார்க்கு - ஒளியையுடைய மாலையையும் நீண்ட கூந்தலையும் பெரிய கண்களையும் உடைய மகளிர்க்கு; இடம்கழி காமன் அன்ன காளை - தம் வயத்தன் ஆகான் என்று நீக்கப்படுவானாகிய காமனைப் போன்ற காளை; தன் கருத்தொடு ஒத்தது ஆகலான் - தன் நினைவோடு அவர் கருத்தும் ஒத்தது ஆகலின்; மாமலர்த் தெரியலான் மணிமிடற்றிடைக் கிடந்த - கொன்றை மாலையை உடைய இறைவனது நீலமணிபோலும் மிடற்றினிடையே கிடந்த; சாம கீதம் ஒன்று மற்றும் சாமி நன்கு பாடினான் - சாம கீதம் ஒன்றை மேலும் சீவகன் நன்றாகப் பாடினான்.

   (வி - ம்.) தெரியலானைச் சீவகன் எனின், பின்னர்ச் சாமி என்னும் பெயர் வேண்டாவாம்.

   இடங்கழிகாமன் - வரம்பு கடந்து எழுதற்குக் காரணமான காமத்திற்குத் தெய்வமானவன் என்பது நன்று. தம்மிடத்தினின்று நீக்கப்படுவானாகிய காமன் என்பர் நச்சினார்க்கினியர். 'இடங்கழி காமமொ டடங்கா னாகி' என்பர் மணிமேகலையினும் (18-119.) 'இடங்கழி மான் மாலை' என வரும் புறப்பொருள் வெண்பாமாலை (130) அடிக்கு 'இராக வேகத்தை யுண்டாக்கும் மயக்கமுடைய மாலைக் காலம்' என்று பொருள் கூறுவர் அதன் உரையாசிரியர்.

( 44 )
2039 கள்ள மூப்பி னந்த ணன்க னிந்தகீத வீதியே
வள்ளி வென்ற நுண்ணி டைம ழைம லர்த்த டங்கணார்
புள்ளு வம்ம திம்ம கன்புணர்த்த வோசை மேற்புகன்
றுள்ளம் வைத்த மாம யிற்கு ழாத்தி னோடி யெய்தினார்.

   (இ - ள்.) புள்ளுவம் மதிமகன் புணர்த்த ஓசைமேற் புகன்று - வேட்டுவனாகிய அறிவுடையான், தம் மோசையாக அழைக்கின்ற ஓசையின் மேலே விரும்பி; உள்ளம் வைத்த மாமயில் குழாத்தின் - மனம் வைத்த மயில்திரள் ஓடுமாறு போல; கள்ளமூப்பின் அந்தணன் கனிந்த கீதவீதி - கள்ள முதுமையை உடைய அந்தணனின் முற்றுப்பெற்ற இசையின் வழியே; வள்ளி வென்ற நுண்இடை மழைமலர்த் தடங்கணார் - கொடியை வென்ற நுண்ணிய இடையையுடைய. குளிர்ந்த மலரனைய பெருங்கண்ணார் எல்லோரும்; ஓடி எய்தினார் - ஓடிச் சேர்ந்தார்.

   (வி - ம்.) வள்ளி - வல்லி; கொடி. புள்ளுவ மதி மகன் - புள்ளின் ஓசையைத் தன்னிடத்தே உடைய மகன், புள்ளுவம் - வஞ்சகம். மதி - அறிவு, எனப்பொருள் கொண்டு வஞ்சக வறிவுடைய மனிதன் எனக் கொள்ளினும் பொருந்தும்.

   கள்ள மூப்பு - வாய்மையல்லாதமூப்பு. அந்தணன் : சீவகன். புகன்று விரும்பி.

( 45 )