பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1151 

2043 மாய்ந்தனன் போலு மென்ன
  மாதரா ரொருங்கு வாழ்த்தி
யாய்ந்தன மைய னுய்ந்தா
  னறிந்தன மதனை யென்றார்.

   (இ - ள்.) இம் மாதர் வாய்ந்த சுண்ணம் சீவகன் பழித்த பின்றை - இம் மாதரின் பொருந்திய சுண்ணத்தைச் சீவகன் பழித்த பிறகு; காய்ந்தனள் என்று கூற - ஆடவரை வெறுத்தனள் என்று கூற; இவட்குத் தீயான் காளை மாய்ந்தனன் போலும் என்ன - (அதனைக் கேட்ட சீவகன்) இவளுக்குத் தீயானாகிய காளை இறந்தான் போலும் என்ன; மாதரார் ஒருங்கு வாழ்த்தி - அங்கிருந்த மகளிரெல்லோரும் சீவகன் நூறும் புகுதுக என்று சேர வாழ்த்தி; ஆய்ந்தனம் ஐயன் உய்ந்தான் - யாங்கள் ஆராய்ந்தோம்; ஐயன் பிழைத்திருக்கின்றான்; அதனை அறிந்தனம் என்றார் - அதனைப் பிறகு விளங்குவதம் செய்தோம் என்றார்.

   (வி - ம்.) இம் மாதர் வாய்ந்த சுண்ணம் என மாறுக. வாய்ந்த : விகாரம், பின்றை - பின்பு. காய்ந்தனள் - வெறுத்தனன். போலும் : ஒப்பில் போலி ஐயன் : சீவகன்.

( 49 )
2044 காலுற்ற காம வல்லிக்
  கொடியெனக் கலங்கி நங்கை
மாலுற்று மயங்க யாங்கண்
  மடக்கிளி தூது விட்டேஞ்
சேலுற்ற நெடுங்கட் செவ்வாய்த்
  தத்தைதன் செல்வங் கண்டே
பாலுற்ற பவளச் செவ்வாய்த்
  தத்தையாற் பரிவு தீர்ந்தேம்.

   (இ - ள்.) கால்உற்ற காமவல்லிக் கொடியென நங்கை கலங்கி - காற்றிற்பட்ட காமவல்லிக் கொடிபோலச் சுரமஞ்சரி கலங்கி; மால் உற்று மயங்க - பித்தேறி மயங்குதலின்; யாங்கள் மடக்கிளி தூது விட்டோம் - யாங்கள் இளங்கிளி ஒன்றைத் தூது விட்டோம்; சேல்உற்ற நெடுங்கண் செவ்வாய்த் தத்தைதன் செல்வம் கண்டு - கயல்மீன் போன்ற நீண்ட கண்களையும் செவ்வாயையும் உடைய தத்தையின் பொலிவைக் கண்டு; பால் உற்ற பவளச் செவ்வாய்த் தத்தையால் பரிவு தீர்ந்தேம் - பால் உண்ட பவளம் போன்ற சிவந்த வாயையுடைய கிளி வந்து கூறியதால் துன்பம் நீங்கினேம்.