பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1152 

   (வி - ம்.) கால் - காற்று. காமவல்லி - ஒரு பூங்கொடி. நங்கை : சுரமஞ்சரி, தத்தை : காந்தருவதத்தை. பவளச் செவ்வாய்த்தத்தை என்றது கிளியை.

( 50 )
2045 அன்பொட்டி யெமக்கோர் கீதம்
  பாடுமி னடித்தி யாரு
முன்பட்ட தொழிந்து நுங்கண்
  மூகவியர் முனிவு தீர்ந்தார்
பொன்றெட்டேம் யாமு நும்மைப்
  போகொட்டோம் பாடல் கேளா
தென்பட்டு விடினு மென்றா
  ரிலங்குபூங் கொம்பொ டொப்பார்.

   (இ - ள்.) இலங்கு பூங்கொம்பொடு ஒப்பார் - விளங்கும் பூங்கொம்பு போன்ற அம் மங்கையர்; அடித்தியாரும் முன்பட்டது. ஒழிந்து நுங்கள் முகவியர் முனிவு தீர்ந்தார் - அடிச்சி யாராகிய சுரமஞ்சரியாரும் முன்னர் நெஞ்சிற் கொண்ட நோன்பு நீங்கி நும்மிடத்து முகம் புகுதலையுடையராய்ச் சீற்றம் ஒழிந்தனர்; அன்பு ஒட்டி எமக்கு ஓர் கீதம் பாடுமின் - (இனி நீரும் எம்மிடம்) அன்பு செய்தலைப் பொருந்தி எமக்கு ஓர் இசையைப் பாடுமின்; என் பட்டு விடினும் - என்ன நேர்ந்தாலும்; யாமும் பாடல் கேளாது நும்மைப் போக ஒட்டோம் - யாங்களும் பாடலைக் கேளாமல் உம்மைப் போகவிடோம்; பொன்தொட்டேம் என்றார் - திருமகள் போலும் இவளைத் தொட்டு ஆணையிட்டோம் என்றனர்.

   (வி - ம்.) மூத்த அந்தணன் ஆதலின் அடித்தியார் என்றார். அடித்தியார் : ஒருவரைக் கூறும் பன்மை.

   அன்பு ஓட்டி - அன்பாலே எம்மைப் பொருந்தி, அடித்தியார் என்றது சுரமஞ்சரியை, முகவியர் - முகம் புகுதலையுடையர். முகவியர் முனிவு தீர்ந்தார் என்பதற்கு முகத்திலுள்ள வியர்வையும் வெறுப்பும் நீங்கினர் எனலும் ஒன்று. பொன் : திருமகள் : ஈண்டுச் சுரமஞ்சரி. போக ஓட்டோம் - போகொட்டோம் என நிலைமொழி ஈறுகெட்டுப் புணர்ந்தது. என்பட்டு விடினும் - என்ன நேரினும்.

( 51 )
2046 பாடுதும் பாவை பொற்பே
  பற்றிமற் றெமக்கு நல்கி
னாடமைத் தோளி னீரஃ
  தொட்டுமேற் கேண்மி னென்ன
நாடியார் பேயைக் காண்பார்
  நங்கைகா ளிதுவு மாமே
யாடுவ தொன்று மன்றிவ்
  வாண்மக னுரைப்ப தென்றார்.