பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1159 

தன் இரு கையும் கூப்பி - தன் இரண்டு கையையுங் குவித்து; தையல் ஈது உரைக்கும் - சுரமஞ்சரி இதனை இயம்புவாள்.

   (வி - ம்.) பொன்னிலம் - பொற்றகடுபடுத்த நிலம். மாலையும் குழலும் வலத்தோளின் வீழ என்க. கன்னியங்கமுகு - இளமையும் அழகுமுடைய கமுகு. கண்போல் எருத்தம், கலன் அணி எருத்தம் எனத் தனித்தனி கூட்டுக.

( 62 )
2057 தாமரைச் செங்கட் செவ்வாய்த்
  தமனியக் குழையி னாயோர்
காமமிங் குடையேன் காளை
  சீவக னகலஞ் சோ்த்தின்
மாமணி மகர மம்பு
  வண்சிலைக் கரும்பு மான்றோ்
பூமலி மார்ப வீவ
  லூரொடும் பொலிய வென்றாள்.

   (இ - ள்.) தாமரைச் செங்கண் செவ்வாய் தமனியக் குழையினாய் - தாமரையனைய கண்களையும் செவ்வாயையும் உடைய, பொற்குழையினாய்!; ஓர் காமம் இங்கு உடையேன் - ஒரு வரம் இங்கு வேண்டுதலையுடையேன்; பூமலி மார்ப! - மலர் நிறைந்த மார்பனே!; காளை சீவகன் அகலம் சேர்த்தின் - காளையாகிய சீவகன் மார்பிலே என்னைச் சேர்ப்பித்தால்; மாமணி மகரம் அம்பு வண்சிலைக் கரும்பு மான்தேர் - பெரிய மகரக் கொடியும், அம்பும், வில்லாகிய கரும்பும் தேரும்; ஊரொடும் பொலிய ஈவல் என்றாள் - ஊருடன் விளங்கத் தருவேன் என்றாள்.

   (வி - ம்.) 'காமமிக்குடையேன்' என்றும் பாடம்.

   தமனியக்குழை - பொற்குழை. காமம் : ஆகுபெயர். காளைசீவகன் - காளையாகிய சீவகன். அகலம் - மார்பு. மகரம் - ஒரு மீன். காமனுக்கு அது கொடியாகலின், மகரம் ஈவேன் என்றாள், ஈவல் : தன்மை ஒருமை.

( 63 )
2058 மட்டவிழ் கோதை பெற்றாய்
  மனமகிழ் காத லானை
யிட்டிடை நோவ நில்லா
  தெழுகென வேந்த றோழன்
பட்டிமை யுரைத்த தோராள்
  பரவிய தெய்வந் தான்வாய்
விட்டுரைத் திட்ட தென்றே
  வேற்கணாள் பரவி மீண்டாள்.