பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 116 

   நீலநிறம் - நீல்நிறம் என நின்றது. நீனிறவண்ணன் : கண்ணன். பானிறவண்ணன் - பலதேவன்.

( 180 )
210 காமமே கன்றி நின்ற கழுதைகண் டருளி னாலே
வாமனார் சென்று கூடி வருந்தினீ ரென்று வையத்
தீமஞ்சோ் மாலைபோல விழித்திடப் பட்ட தன்றே
நாமவேற் றடக்கை வேந்தே நாமிது தெரியி னென்றான்.

   (இ - ள்.) நாமவேல் தடக்கை வேந்தே! - அச்சந்தரும் வேலேந்திய பெரியகையையுடைய அரசே! - காமமே கன்றிநின்ற கழுதை கண்டு - காமத்திலேயே அடிப்பட்டு நின்ற ஆண் கழுதையைப் பார்த்து; அருளி னாலே வாமனார் சென்று கூடி வருந்தினீர் என்று - அருளாலே புத்தனார் பெண் கழுதையாய்ச் சென்று கூடி, 'இக்காமத்தாலே வருந்தினீரே' என்ன; நாம் இது தெரியின் - நாம் (அவ்வாறு நிகழ்ந்த) இக்காமத்தை ஆராயின்; வையத்து ஈமம்சேர் மாலைபோல இழித்திடப்பட்டது - உலகிலே சுடுகாட்டில் விழுந்த மாலைபோல இழித்துக் கூறப்பட்டது அல்லவோ?; என்றான் - என்று கூறினான்.

 

   (வி - ம்.) காமமே : ஏகாரம், தேற்றம் என்று - என்ன.

 

   வாமனார் : புத்தன்.் ஆர்விகுதி, இகழ்ச்சிக் குறிப்பு. வருந்தினீர் - வினா. ஈமம் - சுடுகாடு . நாமம் - அச்சம்.

( 181 )
211 படுபழி மறைக்க லாமோ பஞ்சவ ரன்று பெற்ற
வடுவுரை யாவர் போ்ப்பார் வாய்ப்பறை யறைந்து தூற்றி
யிடுவதே யன்றிப் பின்னு மிழுக்குடைத் தம்ம காம
நடுவுநின் றுலக மோம்ப னல்லதே போலு மென்றான்.

   (இ - ள்.) படுபழி மறைக்கலாமோ? - காமத்தாற் பிறந்த பழியை மறைக்க முடியுமோ?; பஞ்சவர் அன்று பெற்ற வடுவுரையாவர் பேர்ப்பார்? - அக்காலத்திற் பாண்டவர் ஐவரும் ஒருத்தியையே மனைவியாக்கலிற் பெற்ற பழியுரையை நீக்குவார் யார்?; காமம் வாய்ப்பறை அறைந்து தூற்றி இடுவதே அன்றிப் பின்னும் இழுக்கு உடைத்து - காமம் வாய்ப்பறையாலே பரப்பித் தூற்றியிடுதல் அன்றி மறுமையினும் நரகம் முதலியவற்றைத் தரும் வழுவுடையது; நடுவுநின்று உலகம் ஓம்பலே நல்லது போலும் என்றான் - (ஆதலால்) நடுவுநிலையிலே நின்று உலகைக் காத்தலே நல்லது போலும் என்றான்.

 

   (வி - ம்.) போலும் : ஒப்பில் போலி. [ஓம்பலே நல்லது என மாறுக.]

 

   பஞ்சவர் : ஐவர், பாண்டவர். அன்று : பண்டறி சுட்டு.

( 182 )