பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1165 

   கரும்பேர் - கரும்பை ஒத்த. வண்ணக்கு - வண்ணத்திற்கு. விலையே என்புழி ஏகாரம் வினா. மின்னு - மின்னல். பெரியோர் பெருமான் : பிரமன். பூநோக்கி : பெயர் ; சுரமஞ்சரி.

( 72 )

வேறு

2067 இறங்கிய மாதர் தன்னை
  யெரிமணிக் கடகக் கையாற்
குறங்கின்மேற் றழுவி வைத்துக்
  கோதையங் குருதி வேலா
னறந்தலை நீங்கக் காக்கு
  மரசன்யா னாக நாளைச்
சிறந்தநின் னலத்தைச் சேரே
  னாய்விடிற் செல்க வென்றான்.

   (இ - ள்.) கோதை அம் குருதி வேலான் - மாலையணிந்த குருதி வேலினான்; இறங்கிய மாதர் தன்னை - நாணிய மங்கையை; எரி மணிக் கடகக் கையால் தழுவிக் குறங்கின்மேல் வைத்து - விளங்கும் மணிகள் இழைத்த கடகமணிந்த கையினால் தழுவித் தன் துடைமேல் வைத்துக்கொண்டு; நாளைச் சிறந்த நின் நலத்தைச் சேரேனாய் விடின் - நாளைப்போதில் சிறப்புற்ற நின் இன்பத்தை அடையாமல் விட்டால்; அறம் தலை நீங்கக் காக்கும் அரசன் யானாக - அறம் கெட ஆளும் கட்டியங்காரனாகக் கடவேன்; செல்க என்றான் - இனி நீ செல்வாயாக என்றான்.

   (வி - ம்.) இறங்கிய - நாணிய. குறங்கு - துடை. வேலான் : சீவகன். அறந்தலை நீங்கக் காக்கு மரசன் என்றது ஈண்டுக் குறிப்பாற் கட்டியங்காரனை உணர்த்தி நின்றது.

( 73 )
2068 வில்லிடு மணிசெ யாழி மெல்விரல் விதியிற் கூப்பி
நல்லடி பணிந்து நிற்ப நங்கைநீ நடுங்க வேண்டா
செல்கெனச் சிலம்பு செம்பொற் கிண்கிணி மிழற்ற வொல்கி
யல்குற்கா சொலிப்ப வாயம் பாவைசென் றெய்தி னாளே.

   (இ - ள்.) வில்இடு மணிசெய் ஆழி மெல்விரல் விதியின் கூப்பி - ஒளிவிடும் மணியிழைத்த ஆழியணிந்த மெல்விரலை முறையாக்குவித்து ; நல்அடி பணிந்து நிற்ப - அழகிய அடிகளை வணங்கி நிற்க; நங்கை! நீ நடுங்க வேண்டா, செல்க என - நங்கையே! நீ அஞ்சவேண்டா; செல்க என்று விடுப்ப; பாவை - சுரமஞ்சரி; சிலம்பு செம் பொன் கிண்கிணி மிழற்ற - சிலம்பும் கிண்கிணியும் ஒலிக்க; அல்குல் காசு ஒலிப்ப - அல்குலில் மேகலை மணிகள் ஒலிக்க; ஒல்கி - அசைந்து நடந்து; ஆயம் சென்று எய்தினாள் - ஆயத்தினருடன் சென்று சேர்ந்தாள்.