பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1168 

நாய்கன் - மாலையணிந்த வணிகன்; வெய்ய தேன் வாய்க்கொண்டாற்போல் விழுங்கலோடு உமிழ்தல் தேற்றான் - வெப்பம் ஊட்டும் தேனை வாய்க்கொண்டவன் விழுங்கவோ உமிழவோ இயலாது திகைப்பதுபோல உடன்படுதலையும் மறுத்தலையும் அறியாதவனாய்; நோற்றிலாள் திறத்தின் நோற்றிலாதேன் செய்வது என்என்று - நல்வினையில்லாதாள்பால், நல்வினையில்லாத நான் செய்வது என் என்று; மையல்கொண்டிருப்ப - மயங்கியிருப்ப; அப்பால் குமரிதன் மதியின் சூழ்ந்தாள் - அங்கே சுரமஞ்சரி தன் அறிவினாலே அறத்தொடு நிற்றலைச் சிந்தித்தாள்.

   (வி - ம்.) வெப்பமுடைய தேனை வாயிற்கொண்டால், வெம்மையால் நஞ்சென்று விழுங்காமலும், இனிமையால் உமிழாதேயும் இருப்பதைப்போல, இவள் நோன்பினால் உடம்படாமலும், சீவகனாதலின் மறுக்காமலும் இருந்தான்.

( 78 )
2073 பொற்பமை தாமக் கந்து
  பொருந்திய மின்னுப் போல
வெற்பக வெரியு மாலைப்
  பவளத்தூண் பொருந்தி யின்னீர்க்
கற்பெனு மாலை வீசி
  நாணெனுங் களிவண் டோப்பிச்
சொற்புக ரின்றித் தோழிக்
  கறத்தினோ டரிவை நின்றாள்.

   (இ - ள்.) அரிவை - சுரமஞ்சரி; பொற்புஅமை தாமக்கந்து பொருந்திய மின்னுப்போல - அழகு பொருந்திய தாமத்தையுடைய தூணைச் சார்ந்து நின்ற மின்போல; எல்பக எரியும் மாலைப் பவளத் தூண் பொருந்தி - ஞாயிறு தோற்க ஒளிவிடும். மாலையையுடைய பவளத் தூணைச் சார்ந்து நின்று; இன்நீர்க் கற்பு எனும் மாலை வீசி - இனிய தன்மையையுடைய கற்பு என்னும் மாலையை வீசி; நாண் எனும் களிவண்டு ஒப்பி - நாணம் என்னும் களிப்பையுடைய வண்டை ஒட்டி; சொல்புகர் இன்றித் தோழிக்கு அறத்தினோடு நின்றாள் - சொற்குற்றம் இல்லாமல், தோழிக்கு அறத்தொடு நின்றாள்.

   (வி - ம்.) மாலையால் ஒட்டவே வண்டு மிகவும் நீங்காதாம், 'உயிரினுஞ் சிறந்தன்று நாணே; நாணினும் - செய்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று' (தொல். களவு. 22) என்றதனாற் சிறிது நாணை விட்டாள். அறத்தினொடு : இன் : அசை. தாமம் - ஒழுங்கு, மாலையும் ஆம். எல் - சூரியன். பக என்பது இங்கு தோற்றுஓட என்னும் பொருளைக் குறித்தது. இன் நீர் - இனிய தன்மை - நாணம் என்பதை வண்டாகவும், கற்பு என்பதைப் பூமாலையாகவும் உருவகித்தார்.

( 79 )