பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1169 

2074 வழிவளர் மயிலஞ் சாயற் பவளப்பூம் பாவை யன்ன
கழிவளர் கயற்க ணங்கை கற்பினை யறிந்து தோழி
யழிமது மாலை சோ்த்தி யடிபணிந் தார வாழ்த்திப்
பொழிமதுப் புயலைங் கூந்தற் செவிலியைப் பொருந்திச் சொன்னாள்.

   (இ - ள்.) வழிவளர் மயில்அம் சாயல் பவளப்பூம் பாவை அன்ன - நன்னெறியிலே வளர்ந்த மயிலனைய அழகிய சாயலையுடைய பவளத்தாலாகிய பாவை போன்ற; கழிவளர் கயற்கண் நங்கை கற்பினைத் தோழி அறிந்து - கழியிலே வளரும் கயல் போலுங் கண்களை உடைய நங்கையின் கற்பினைத் தோழி அறிந்து; அழிமதுமாலை சேர்த்தி அடிபணிந்து ஆர வாழ்த்தி - தேன்வழியும் மாலையை அவட்கு அணிந்து, அடியிற் பணிந்து நிறைய வாழ்த்துக் கூறி; மதுமொழி புயல் ஐங்கூந்தல் - தேன் வழியும், முகிலனைய ஐம்பாலையுடைய அத்தோழி; செவிலியைப் பொருந்திச் சொன்னாள் - செவிலியை அடைந்து கூறினாள்.

   (வி - ம்.) ஐங்கூந்தலைச் செவிலிக்காக்கினும் பொருந்தும்.

   வழி - நல்லவழி, வழி, 'ஆசாரம்' என்பர் நச்சினார்க்கினியர். ஆசாரம் - நல்லொழுக்கம். கழி - உப்பங்கழி. கற்பினை - கற்புக்கடம் பூண்ட தன்மையை என்க. தோழி செவிலியைப் பொருந்தி அறத்தொடு நின்றாள் என்க.

( 80 )
2075 நனைவளர் கோதை நற்றாய் நங்கைக்கீ துள்ள மென்று
சுனைவளர் குவளை யுண்கட் சுமதிக்குச் செவிலி செப்பக்
கனயிருட் கனவிற் கண்டேன் காமர்பூம் பொய்கை வற்ற
வனையதாங் கன்னி நீரின் றற்றதா நங்கைக் கென்றாள்.

   (இ - ள்.) நனைவளர் கோதை நற்றாய்! - தேன் பொருந்திய மாலையையுடைய நற்றாயே!; நங்கைக்கு ஈது உள்ளம் என்று - சுரமஞ்சரியின் உள்ளம் இதுவாகும் என்று; சுனைவளர் குவளை உண்கண் சுமதிக்கு - சுனையில் வளருங் குவளை போன்ற மையுண்ட கண்களையுடைய சுமதிக்கு; செவிலிசெப்ப - செவிலி கூற; கனை இருள் கனவில் காமர்பூம் பொய்கை வற்றக் கண்டேன் - நள்ளிரவிற் கனவிலே விருப்பம் ஊட்டும் மலர்ப்பொய்கை வற்றக்கண்டேன்; அனையதுஆம் கன்னிநீர் இன்று நங்கைக்கு அற்றது ஆம் என்றாள் - அத் தன்மையதாகிய கன்னித் தன்மை இன்று நங்கைக்கு நீங்கியபோலும் என்றாள்.

   (வி - ம்.) நனை - அரும்பு, நற்றாய் : சுமதி, விளி, நங்கை என்றது சுரமஞ்சரியை. கனையிருள் - மிக்க இருள். கனவில் பொய்கை வற்றக் கண்டேன் என மாறுக. அக் கனவின்பயன் இஃதே போலும் என்றாள் என்பது கருத்து.

( 81 )