பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1174 

2083 மணியியல் வள்ளத் தேந்த
  மதுமகிழ்ந் தனந்தர் கூர
வணிமலர்க் குவளைப் பைம்போ
  தொருகையி னருளி யம்பொற்
பிணையனா ளருகு சேரிற்
  பேதுறு நுசுப்பென் றெண்ணித்
துணையமை தோள்க டம்மாற்
  றோன்றறான் புல்லி னானே.

   (இ - ள்.) மணி இயல் வள்ளத்து மது ஏந்த - (மேலும் கூட்டத்தை விழைந்து) மணிகள் இழைத்த கிண்ணத்திலே மதுவை ஏந்த; மகிழ்ந்து அனந்தர் கூர - அதனை அவள் பருகி மகிழ்ந்து மயக்கம் மிகுதலின்; பிணை அனாள் அருகுசேரின் பேது உறும் நுசுப்பு என்று எண்ணி - மான் போன்றவளை நெருங்கித் தழுவின் இடைவருந்தும் என்று எண்ணி; அணி மலர்க்குவளைப் பைம்போது ஒரு கையின் அருளி - அழகிய மலராகிய குவளை மலரை ஒரு கையாலே கூந்தலுக்கு நல்கி; துணை அமை தோள்கள் தம்மால் தோன்றல்தான் புல்லினான் - இணையாகப் பொருந்திய தோள்களாற் சீவகன் தன் மார்பினால் நெகிழத் தழுவினான்.

   (வி - ம்.) 'அஞ்சொற் பிணையலும் நறிய சேர்த்தி' என்பது பாடமாயின் புகழ்மாலை சூட்டி என்க.

   மது ஏந்த அதனை மகிழ்ந்தென்க. அனந்தர் - மயக்கம். பிணையனாள் - பெண்மான் போன்ற சுரமஞ்சரி. நுசுப்புப் பேதுஉறும் என மாறுக.

( 89 )
2084 மல்லலங் கங்கை போலும் பலர்முயங் கார மார்பிற்
புல்லன்மின் போமின் வேண்டா வென்றவள் புலந்துநீங்க
முல்லையங் கோதை யொன்றும் பிழைப்பிலேன் முனியனீயென்
றல்லலுற் றரத்த மார்ந்த சீறடி தொழுதிட் டானே.

   (இ - ள்.) மல்லல்அம் கங்கைபோலும் பலர் முயங்கு ஆர மார்பின் - வளமிகு கங்கைபோலப் பலரும் பலமுகமாக முயங்கும் மார்பினால்; புல்லன்மின், போமின், வேண்டா என்று - இனித் தழுவற்க, செல்லுமின், தீண்ட வேண்டா என்று கூறி; அவள் புலந்து நீங்க - அவள் ஊடி நீங்கி நிற்க; முல்லை அம் கோதை! ஒன்றும் பிழைப்பிலேன், நீ முனியல் என்று - முல்லை மலர்க்கோதையே! யான் ஏதும் பிழை செய்திலேன், நீ முனியாதே என்று; அல்லல் உற்று - வருத்தமுற்று; அரத்தம் ஆர்ந்த சீறடி தொழுதிட்டான் - செந்நிறம் பொருந்திய சிற்றடியை வணங்கினான்.