பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1178 

வென்ற புலவியைப் போக்கி; காழ் இன்றிக் கனிந்த காமக் கொழுங்கனி நுகர்ந்து - விதையின்றிப் பழுத்த கொழுவிய காமக் கனியை அயின்று; தையலோடு ஆடி விள்ளான் - சுரமஞ்சரியுடன் ஆடி நீங்கானாய்; ஊழ் சென்ற மதியம் வெய்யோன் ஒட்டி ஒன்றாயது ஒத்தான் - முறையால் நிறைந்த உவவுமதியைக் கதிரவன் பொருந்தி ஒன்றாய இயல்பை ஒத்தான்.

   (வி - ம்.) கிளவியாள் : சுரமஞ்சரி. 'காமம் புணர்தலின் உடல் இனி' தென்பது பற்றி 'அமிழ்துறழ் புலவி' என்றார். 'காழின்றிக் கனிந்த காமக் கொழுங்கனி' என்பதனோடு ”காமத்துக் காழில் கனி” என்னும் வள்ளுவர் மொழியையும் நினைக. ஊழ்சென்ற மதியம் - முறையே நிரம்பிய முழுத் திங்கள்.

( 95 )
2090 பச்சிலைப் பட்டு முத்தும்
  பவளமு மிமைக்கு மல்கு
னச்சிலை வேற்கண் மாதர்
  நகைமுக முறுவன் மாந்தி
யிச்சையுங் குறிப்பு நோக்கி
  யெய்வதே கரும மாகக்
கைச்சிலை கணையோ டேந்திக்
  காமனிக் கடையைக் காப்பான்.

   (இ - ள்.) பச்சிலைப் பட்டும் முத்தும் பவளமும் இமைக்கும் அல்குல் - பசிய இலைத் தொழிலையுடைய பட்டும் முத்தும் பவளமும் ஒளிரும் அல்குலையும்; நச்சு இலை வேற்கண் மாதர் - நஞ்சு பொருந்திய இலைவடிவான வேலனைய கண்ணையும் உடைய மாதரது; நகைமுக முறுவல் மாந்தி - நகைமுகத்தின் முறுவலை நுகர; இச்சையும் குறிப்பும் நோக்கி - அவள் நினைவையும் அவள் குறிப்பையும் பார்த்து; எய்வதே கருமம் ஆக - அம்பை விடுவதே தொழிலாக; காமன் கைச்சிலை கணையோடு ஏந்தி - காமனானவன் கைவில்லையும் அம்பையும் ஏந்தியவாறு; இக்கடையைக் காப்பான் - இவ் வாயிலை இப்போது காப்பானாயினான்; வேறு காவலர் இலர்.

   (வி - ம்.) பச்சிலைப்பட்டு - பசிய இலைத்தொழிலையுடைய பட்டு. நச்சிலை - நஞ்சு தோய்த்த இலை. மாதர் : சுரமஞ்சரி. மாந்தி - மாந்த. இச்சை - வேட்கை. இக்கடையைக் காப்பான் காமனே என்றது பண்டு ஆடவர் அணுகாதபடி காக்கப்பட்ட இக்கடையை இப்பொழுது ஆடவன் பிரியாதபடி காமன் ஒருவனே காப்பவன் ஆயினான் என்பதுபட நின்றது. கடை - வாயில். காமனிக் கடையைக் காப்பான் என்பது காமன் போர்விளைத்துச் சுரமஞ்சரிக்கும் சீவகனுக்கும் காதலை யுண்டாக்கிப் புணர்ச்சியை மேலும் மேலும் விரும்புமாறு செய்தான் என்ற கருத்தை யுள்ளடக்கி நின்றது.

( 96 )