பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1184 

காவிஅம் கண்ணி! ஒன்றும் கவலல் - காவியனைய கண்ணியே ! நீ எதற்கும் வருந்தற்க; யான் உய்ந்தது எல்லாம் - யான் எல்லாவற்றினும் பிழைத்தது; நாவியே நாறும் மேனி நங்கை! நின் தவத்தின் என்றான் - புழுகே மணக்கும் மேனியையுடைய நங்கையே! நின் தவத்தினாலே என்றான்.

   (வி - ம்.) இவளைத் தீண்டிச் சீவகன் கொலையுண்டானென்று உலகம் குணமாலையைக் கூறலின், 'தீவினையுடைய' என்றாள். தான் விலக்கவும் இவன் தீண்டலின் பின்னும், 'வேண்டா' என்றாள். இவனை அடைந்து வைத்தும் இங்ஙனம் நீக்கிக் கூற வேண்டலின், 'பாவியேன்' என்றான்.

   'நந்த திண்தேர் - பண்' (சீவக. 1088) என, ஆசிரியனைத் தப்பப் புகுந்ததனையும், 'பெண்ணிடர் விடுப்ப' (சீவக. 1752) என வந்த தன்மையையும், தான் கட்டியங்காரன் தொழிற் பகுதியோரைக் கொல்வோம் என்று நினைத்ததனையும் கருதி, 'எல்லாம்' என்றான். கவலல் : அல்விகுதி பெற்ற எதிர்மறை வியங்கோள் வினைமுற்று.

( 105 )
2100 அன்னமென் னடையு நோக்குஞ்
  சாயலு மணியு மேரு
மின்னினுண் ணுசுப்பும் வெய்ய
  முலைகளு முகமுந் தோன்ற
வென்மனத் தெழுதப் பட்டா
  யாயினு மரிவை கேளா
யுன்னையான் பிரிந்த நாளோ
  ரூழியே போன்ற தென்றான்.

   (இ - ள்.) அரிவை! கேளாய்! - அரிவையே! கேட்பாயாக!; அன்னம் மெல்நடையும் நோக்கும் சாயலும் அணியும் ஏரும் மின்னின் நுண் நுசுப்பும் வெய்ய முலைகளும் முகமும் தோன்ற - அன்னம் போன்ற மெல்லிய நடையையும் பார்வையையும் மென்மையையும் அழகையும் எழுச்சியையும் மின் போன்ற இடையையும் வெவ்விய முலைகளையும் விளங்க; என் மனத்து எழுதப்பட்டாய் - என் மனத்திலே எழுதப்பட்டு நீங்காதிருந்தாய்; ஆயினும் - என்றாலும்; உன்னை யான் பிரிந்த ஓர் நாள் ஊழியே போன்றது என்றான் - நின்னை மெய்யுறு புணர்ச்சியின்றி நான் பிரிந்த ஒருநாள் ஒரூழிக்காலம் போலேயிருந்தது என்றான்.

   (வி - ம்.) நின்னடையும் நோக்கும் சாயலும் அணியும் ஏரும் நுசுப்பும் முலைகளும் முகமும் என்னெஞ்சத்தே நன்கு பதிந்துள்ளன ஆகலின் நின்னையான் ஒரு சிறிதும் மறந்திலேன், அப்படியிருந்தும் பிரிந்த ஒருநாள் ஊழிபோல என்னை வருத்தியது என்பதாம். இன்னும் என்னை வருத்தாதே என்பது குறிப்பெச்சம்.

( 106 )