பக்கம் எண் :

சுரமஞ்சரியார் இலம்பகம் 1185 

2101 இளையவண் மகிழ்வ கூறி
  யின்றுயி லமர்ந்து பின்னாள்
விளைபொரு ளாய வெல்லாந்
  தாதைக்கே வேறு கூறிக்
கிளையவர் சூழ வாமான்
  வாணிக னாகிக் கேடி
றளையவிழ் தாம மார்பன்
  றன்னகர் நீங்கி னானே.

   (இ - ள்.) கேடுஇல் தளை அவிழ் தாமம் மார்பன் - குற்ற மில்லாத முறுக்கவிழ்ந்த மாலையணிந்த மார்பன்; இளையவன் மகிழ்வ கூறி - குணமாலை மகிழ்வனவற்றை இவ்வாறு உரைத்து; இன்துயில் அமர்ந்து - (அவளுடன்) இனிய துயிலைக் கொண்டு; பின்நாள் தாதைக்கே விளைபொருள் ஆய எல்லாம் வேறு கூறி - மற்றைநாள் தந்தையிடமே மேல்வரும் பொருளாக உள்ளவற்றையெல்லாம் தனியே எடுத்துச் சொல்லி; கிளையவர் சூழ - தோழர் சூழ்ந்துவர; வாம்மான் வாணிகன் ஆகி - தாவுங்குதிரையை வாங்கும் வணிகனாகப் புனைந்துகொண்டு; தன்நகர் நீங்கினான் - தன் மனையை விடுத்துச் சென்றான்.

   (வி - ம்.) 'பின்னாள்' என்று ஈண்டுக் கூறலின், 'அன்றைப் பகலே வந்தடைவன்' (சீவக. 1932) என்றல் ஆகாதென்றுணர்க. மற்றும், நச்சினார்க்கினியர் கூற்றுப்போல, 'விமலை மணம்' ஒருநாளினும். 'சுரமஞ்சரி மணம்' ஒரு நாளினும் முடியாமல் நான்குநாள் வரையாயிருக்க வேண்டும் என்றும் உணர்தல்வேண்டும். சுரமஞ்சரியின் மனையில் மணத்திற்கு ஓரிரவு தங்கினதாக உணரப்படுதலானும், நச்சினார்க்கினியர் உரையின் வண்ணமே விமலையின் மனையிலே இருநாள் தங்கினதாக உணர்வதாலும் என்க.

( 107 )

விமலையார் இலம்பகம் முற்றிற்று.