பக்கம் எண் :

  1187 

10. மண்மகள் இலம்பகம்

(கதைச் சுருக்கம்)

   ஏமாங்கதத்தினின்றும் புறப்பட்ட சீவகன் விதையநாட்டிற் சென்று தன் மாமனாகிய கோவிந்தனைக் கண்டு வணங்கினன். சீவகன் வருகையாற் கோவிந்தன் அளவிலா மகிழ்ச்சி யெய்தினன். பின்னர்ச் செய்யக்கடவன கருதித் தன் மகனாகிய சீதத்தனுக்குத் திருமுடி கவித்து அரசியலை அவன்பால் அளித்தனன்.

   இங்ஙன மிருக்கும்பொழுது, கட்டியங்காரன் கோவிந்தனுக்கு விடுத்த வோலையை விரிசிகன் என்பான் கோவிந்தனுக்குப் படித்துக்காட்டினன். அதன்கண் கட்டியங்காரன் தன்னை இராசமாபுரத்திற்கு வந்து தன்னோடு கேண்மை கொள்ளும்படி எழுதியிருந்தனன். அதுகேட்ட கோவிந்தன் கட்டியங்காரனோடு போர் செய்தற்கு அவ்வோலையை வாயிலாகக் கொண்டனன். உடனே நால்வகைப் படையோடும் சீவகன் முதலியோரொடும் கோவிந்தன் விதையத்தினின்றும் புறப்பட்டு ஏமாங்கதம் புக்கனன். வழியில் நன்னிமித்தங்கள் தோன்றின. இராசமாபுரத்தின் பக்கத்தே வந்து தங்கினான். அப்பொழுது, கட்டியங்காரன் திறத்தில் தீய நிமித்தங்கள் தோன்றிண.

   வஞ்சகத்தால் தன்னை வெல்லக்கருதிய கட்டியங்காரனைக் கோவிந்தனும் வஞ்சகமாகவே கொல்லக் கருதினன். தன்மகள் இலக்கணைக்குச் சுயம்வரம் அமைத்தான். அச் சுயய்வரத்தின்கண் திரிபன்றிப் பொறியொன்று வைத்து. அதனை எய்து வீழ்த்தியவனே இலக்கணைக்குக் கணவனாவன் என்று முரசறைவித்தனன். பலநாட்டு மன்னர் மக்களும் இலக்கணையை எய்த விரும்பிவந்து குழுமினர். திரிபன்றியை வீழ்த்த முயன்று தோற்றனர். சீவகன் யானையின்மேலேறி அச் சுயம்வர மண்டபமெய்தினன். வெளிப்பட்ட சீவகனைக் கண்ட கட்டியங்காரன் புலிகண்ட மானென அஞ்சினான். சீவகன் அத் திரிபன்றியை அம்பேவி வீழ்த்தனன். கோவிந்தன் அவ்வவையோர்க்குச் சீவகன் வரலாற்றை வெளிப்பட விளம்பினன். அப்பொழுது அகல்விசும்பில் ஓர் இயக்கன் தோன்றி, ”சீவகனாகிய அரிமான் கட்டியங்காரனாகிய யானையைக் கொன்றொழிக்கும்” என்று இயம்பினான். அதுகேட்ட கட்டியங்காரன் சீற்றமுற்றவனாய்ச் சீவகனை நோக்கிச், ”சிறியோய்! நின்னை யான் அஞ்சுவேனல்லேன்! என்னாற்றலை நீ யறியாய்! நின் தந்தை யறிவன்!” என்று வெகுண்டான்.