பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1188 

   பின்னர்ச் சீவகன் முதலியோர்க்கும் கட்டியங்காரனுக்கும் பெரும் போர் நிகழ்ந்தது. கட்டியங்காரன் படைஞர் சீவகன் படைக்குத் தோற்றனர் மாண்டனர்: அஞ்சி இரியல் போயினர். சீவகன் கட்டியங்காரனையும் அவன் மக்களையும் அப்போர்க்களத்தே கொன்று நூழிலாட்டினன். இச் செய்தி கேட்டு விசயை மகிழ்ந்தனள்; உலகம் பாராட்டிப் புகழ்ந்தது.

2102 குடம்புரை செருத்தற் குவளைமேய் கயவாய்க்
  குவிமுலைப் படர்மருப் பெருமை
நடந்தவா யெல்லா நறுமலர் மரையி
  னாகிலைச் சொரிந்தவந் தீம்பா
றடஞ்சிறை யன்னங் குருகொடு நாரைப்
  பார்ப்பின மோம்புதண் மருத
மடங்கல்போற் றிறலார் மாமணி கறங்க
  வளவயற் புள்ளெனக் கழிந்தார்.

   (இ - ள்.) குடம்புரை செருத்தல் - குடம் போன்ற மடியையும்; குவளைமேய் கயவாய் - குவளை மலரை மேயும் பெரிய வாயையும்; குவிமுலை - குவிந்த முலையையும்; படர் மருப்பு - படர்ந்த கொம்புகளையும் உடைய; எருமை - எருமையானது, நடந்த வாய் எல்லாம் - சென்ற இடமெங்கும்; நறுமலர் மரையின் நாகு இலை சொரிந்த அம்தீ பால் - நல்ல மலரையுடைய தாமரையின் இளைய இலையிலே சொரிந்த அழகிய இனிய பால்; தடம் சிறை அன்னம் குரு கொடு நாரைப் பார்ப்பினம் ஓம்பு தண் மருதம் - பெரிய சிறகுகளையுடைய அன்னமும் குருகும் நாரையுமாகிய பார்ப்பின் திரளை வளர்க்கின்ற தண்ணிய மருத நிலத்தை; மாமணி கறங்க - குதிரைகளின் கழுத்திற் கட்டிய கிண்கிணி முதலியனவும் யானையின் பக்கமணிகளும் ஒலித்தலாலே; வளவயல் புள்எழ - வளமிகுங் கழனியில் அமர்ந்திருந்த பறவைகள் எழுந்தோட; மடங்கல் போல் திறலார் கழிந்தார் - சிங்கம் போன்ற வலியினார் கடந்தனர்.

   (வி - ம்.) அன்னம் முதலியவற்றின் பார்ப்புக்கள் பாலுண்டல் நிலப்பண்பு.

   புரை : உவமவுருபு. செருத்தல் - மடி. கயவாய் - பெரிய வாய். நடந்தவாய் - நடந்த இடம். மரை - தாமரை; முதற்குறை. நாகிலை - இளமையுடைய இலை. பால் : எழுவாய் ஓம்பும் - பாதுகாக்கும் மடங்கல் - சிங்கம். மாமணி. குதிரைக்குக் கட்டிய மணி. கழிதல் புள்ளெழுதற்குக் காரணம் என்க. குருகு - கொக்கு. பார்ப்புஇனம் - பறவைக் குஞ்சுகளின் கூட்டம் மடங்கல் - சிங்கம். தீம்பால் பார்ப்பினம் ஓம்பும் தண்மருதம் எனக் கூட்டுக.

( 1 )