பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1189 

2103 புரிவளை யலறிப் பூசலிட் டீன்ற
  பொழிகதிர் நிலத்தில் முழக்கி
வரிவளை சூழும் வலம்புரி யினத்துட்
  சலஞ்சல மேய்வன நோக்கி
யரிதுண ரன்னம் பெடையெனத் தழுவி
  யன்மையி னலமர லெய்தித்
திரிதரு நோக்கந் தீதிலார் நோக்கி
  நெய்தலுங் கைவலத் தொழிந்தார்.

   (இ - ள்.) புரிவளை அலறிப் பூசல் இட்டு ஈன்ற - முறுக்குடைய சங்குகள் சூல்முதிர்ச்சியால் நொந்து முழங்கிப் பெற்ற; பொழிகதிர் நித்திலம் உழக்கி - பெய்யும் ஒளியையுடைய முத்துக்களைக் கலக்கி; வரிவளை சூழும் வலம்புரி இனத்துள் - சங்குகள் சூழத்திரியும் வலம்புரியின் திரளிலே; சலஞ்சலம் மேய்வன நோக்கி - சலஞ்சலங்கள் மேய்வனவற்றைப் பார்த்து; அரிது உணர் அன்னம் பெடையெனத் தழுவி - அரியதை உணரவல்ல அன்னமானது தன் பெடையென்று தழுவி; அன்மையின் அலமரல் எய்தி - அல்லாமையின் மனக்குழப்பம் அடைந்து - திரிதரும் நோக்கம் தீது இலார் நோக்கி - மறித்துப் போகின்ற நோக்கத்தைத் தீமையிலாதார் தாம் பார்த்து; கைவலத்து நெய்தலும் ஒழிந்தார் - ஒழுக்கத்திறனுள்ள நெய்தலையுங் கடந்தனர்.

   (வி - ம்.) தீது - ஈண்டு வேட்கை என்பர் நச்சினார்க்கினியர்.

   புரிவளை - முறுக்குடைய சங்கு, நித்திலம் - முத்து, வலம்புரிச் சங்கு ஆயிரஞ் சூழச் செல்வது சலஞ்சலம் என்னும் சிறந்த சங்கு என்பது தோன்ற வலம்புரி இனத்துட் சலஞ்சலம் என்றார். பாலையும் நீரையும் பிரித்துணரவல்ல என்பார் அரிதுணர் அன்னம் என்றார். அன்மையின் - அல்லாமையால். அலமரல் - சுழற்சி. தீதிலார் - சீவகன் முதலியோர்.

( 2 )
2104 கோட்டிளங் கலையுங் கூடுமென் பிணையுங்
  கொழுங்கதிர் மணிவிளக் கெறிப்பச்
சேட்டிளங் கொன்றைத் திருநிழற் றுஞ்சச்
  செம்பொறி வண்டவற் றயலே
நாட்டிளம் படியார் நகைமுகம் பருகு
  நல்லவர் போன்மலர் பருகு
மோட்டிள முல்லை மொய்ம்மலர்க் கான
  முருகுவந் தெதிர்கொள நடந்தார்.

   (இ - ள்.) சேடு இளங் கொன்றைத் திருநிழல் - உயர்ந்த இளமை பொருந்திய கொன்றை மரத்தின் அழகிய நிழலிலே;