பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1190 

கொழுங்கதிர் மணிவிளக்கு எறிப்ப - கொழுவிய கதிரையுடைய மணிவிளக்கு ஒளிசெய; கோடு இளங்கலையும் கூடும் மென்பிணையும் துஞ்ச - கொம்பினையுடைய இளங்கலை மானும் அதனுடன் கூடிய மென்மையான பிணைமானும் துயில; அவற்று அயலே - அவற்றின் அருகில்; நாட்டு இளம்படியார் நகை முகம் பருகும் நல்லவர்போல் - நாட்டிலுள்ள இளமங்கையரின் நகைமுகத்தின் எழிலைப் பருகும் ஆடவரைப்போல; செம்பொறி வண்டு மலர் பருகும் மோட்டிள முல்லை மொய்ம்மலர்க்கானம் - செம்புள்ளிகளையுடைய வண்டுகள் மலர்களைப் பருகுவதற்குக் காரணமான மிகுதியான முல்லை மலர்களையுடைய கானத்தை; முருகுவந்து எதிர்கொள நடந்தார் - மணம் வந்து எதிர்கொள்ளக் கடந்தார்.

   (வி - ம்.) கலை - ஆண்மான். பிணை - பெண்மான். சேடு - பெருமை. திரு நிழல் - அழகிய நிழல். துஞ்சுதல் - துயிலுதல். இளம்படியார் - மகளிர். நல்லவர் என்றது, ஆடவரை. மோடு - மிகுதி; பெருமையுமாம். முருகு - மணம். இது முல்லை நிலத்தை வண்ணித்தது.

( 3 )
2105 குழவிவெண் டிங்கட் கோட்டின்மேற் பாயக்
  குளிர்புனல் சடைவிரித் தேற்கு
மழலவிர் சூலத் தண்ணலே போல
  வருவிநீர் மருப்பினி னெறியக்
கழைவளர் குன்றிற் களிறுநின் றாடுங்
  கடிநறுஞ் சந்தனச் சார
லிழைவளர் முலையார் சாயல்போற் றோகை
  யிறைகொள்பூங் குறிஞ்சியு மிறந்தார்.

   (இ - ள்.) குழவி வெண் திங்கள் கோட்டின்மேல் பாய - வெண்மையான பிறைத்திங்களின் கோட்டிலே பாயுமாறு; குளிர்புனல் சடைவிரித்து ஏற்கும் - குளிர்ந்த கங்கை நீரைச் சடையை விரித்துத் தாங்குகின்ற; அழல் அவிர் சூலத்து அண்ணலே போல - தழல்விளங்குஞ் சூலத்தை ஏந்திய சிவபெருமானைப் போல; அருவிநீர் மருப்பினின் ஏறிய - அருவி நீர் தன் கொம்பிலே வீழ; கழைவளர் குன்றில் களிறு நின்று ஆடும் - மூங்கில் வளருங் குன்றிலே யானை நின்று நீராடுகின்ற; கடிநறுஞ் சந்தனச் சாரல் - மணமுடைய நல்ல சந்தன மரங்கள் நிறைந்த சாரலிலே; இழைவளர் முலையார் சாயல்போல் தோகை இறைகொள் - அணி வளரும் முலையாரின் மென்மையான தோற்றம் போல மயில்கள் தங்கிய; பூங்குறிஞ்சியும் இறந்தார் - அழகிய குறிஞ்சி நிலத்தையுங் கடந்தார்.

   (வி - ம்.) இஃது இல்பொருளுவமை. கங்கைத் தலைப்பாகிய இமவானிற் பதுமையென்னும் பொய்கையில், நீர் விழுகின்ற தாழ்வரையில் உருத்திரப் படிமம் இருத்தலின் சூலத்தண்ணல் என்றார்.