பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1192 

   தேயத்திற்கு முதுவேனிலாய், வெம்மை விளைத்துப் பாலையாக்கிற்று. இனி இமயத்தைச் சூழ்ந்த இடம் தெய்வத்தின் ஆணையால் எக்காலமும் மாறாமல், ஓரிடம் ஒருகாலமாகவே இருக்குமாதலின். அவ்விடத்தே இவர் போகின்றார் என்றுமாம். இவ்வாறு காலத்தைப் பற்றி நச்சினார்க்கினியர் கூறுவர். முல்லையும் குறிஞ்சியும் வெம்மை விளைந்து பாலையாகலாம் என்று முன்னர்ச் சிலப்பதிகார மேற்கோள் காட்டியதாலும், இவர்கள் ஐவகை நிலத்தையுங் கடந்து சென்றனர் என்று கூறவே பாலையைக் கூறினார் ஆதலானும் காலத்தைப் பற்றியே கவலை ஈண்டு வேண்டற்பாற்றன்று. இராசமாபுரத்தே கூதிரானபோது ஓரிரண்டு நாடுகளே யிடையிட்ட விதேக நாட்டில் மார்கழியிற் கோடையாக இருக்குமென்பது பொருந்தாது.

( 5 )

   இது பாலை நிலத்தை வண்ணித்தது.

2107 நிலையிலா வுலகி னின்றவண் புகழை
  வேட்டவ னிதியமே போன்று
மிலைகுலாம் பைம்பூ ணிளமுலைத் தூதி
  னின்கனித் தொண்டையந் துவர்வாய்க்
கலைவலார் நெஞ்சிற் காமமே போன்றுங்
  கடவுளர் வெகுளியே போன்று
முலைவிலார் நில்லா தொருபக லுள்ளே
  யுகுப்பவிர் வெஞ்சுரங் கடந்தார்.

   (இ - ள்.) நிலை இலாஉலகில் நின்ற வண்புகழை வேட்டவன் நிதியமே போன்றும் - நிலையற்ற உலகிலே நிலைபெற்ற வளவிய புகழை விரும்பினவன் செல்வம் போமாறு போன்றும்; இலைகுலாம் பைம்பூண் இளமுலைத் தூதின் - இலைவடிவப் பூணணிந்த இளமுலையாகிய தூதினையும்; இன்கனித் தொண்டை அம் துவர்வாய் - இனிய தொண்டைக் கனியனைய செவ்வாயினையும் உடைய; கலைவலார் நெஞ்சின் காமமே போன்றும் - பரத்தையர் உள்ளத்தே காமம் போமாறு போலவும்; கடவுளர் வெகுளியே போன்றும் - முனிவர்களின் சீற்றம் விலகுமாறு போலவும்; உலைவிலார் நில்லாது - சோர்விலாராய் நில்லாமல்; ஒருபகலுள்ளே - ஒரு பகற்பொழுதிலே; உருப்பு அவிர் வெம் சுரம் கடந்தார் - வெம்மை விளங்குங் கொடுஞ்சுரத்தைக் கடந்தார்.

   (வி - ம்.) கலைகளாவன : 'வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்துக் - கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும் பண்ணியாழ்க் கரணமும் பாடைப் பாடலும் தண்ணுமைக் கருவியும் தாழ்தீங் குழலும் - கந்துகக்கருத்தும் மடைநூற் செய்தியும் - சுந்தரச் சுண்ணமும் தூ நீராடலும் - பாயற் பள்ளியும் பருவத்தொழுக்கமும் - காயக்கரணமும் கண்ணியது உணர்தலும் - கட்டுரை வகையும் கரந்துறை கணக்கும் வட்டிகைச் செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும் கோலம் கோடலும் கோவையின் கோப்பும் - காலக் கணிதமும் கலைகளின் துணிவும் - நாடக