பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1198 

   (இ - ள்.) கருங்கண் இளமுலை கச்சு அற வீக்கி - கரிய கண்களையுடைய இளமுலைகளைக் கச்சினால் இறுகக் கட்டி; மருங்குல் தளர - இடை தளர (வந்து) ; மழைமருள் மாடம் - முகில் மயங்கும் மாடங்களின்மேல்; நெருங்க இறை கொண்ட நேர் இழையார் தம் - நெருங்கத் தங்கியிருக்கும் அழகிய அணியையுடைய மகளிரின்; பெருங்கண் அலமரும் பெற்றித்து ஒருபால் - பெரிய கண்கள் இவனைக் காணாது சுழலும் தன்மையை ஒருபக்கம் உடையது.

   (வி - ம்.) அற வீக்கி - இறுகக்கட்டி, மருங்குல் - இடை, மழை - முகில். மருளுதற்குக் காரணமான மாடம் என்க. இறைகொண்ட - தங்கிய பெற்றித்து - தன்மையுடையது.

( 15 )
2117 மின்னு குழையினர் கோதையர் மின்னுயர்
பொன்வரை மாடம் புதையப் பொறிமயி
றுன்னிய கோதைக் குழாமெனத் தொக்கவர்
மன்னிய கோல மலிந்த தொருபால்.

   (இ - ள்.) மின்னு குழையினர் கோதையர் - மின்னுங் குழையுடனும் கோதையுடனும் (வந்து) ; மின்உயர் பொன்வரை மாடம் புதைய - ஒளியால் உயர்ந்த பொன்மலை போன்ற மாடங்கள் மறையுமாறு; தொக்கவர் மன்னிய கோலம் - கூடிய மகளிர் பொருந்திய ஒப்பனை; துன்னிய தோகைப் பொறிமயில் குழாம் என - பொருந்திய கலவத்தையுடைய புள்ளிமயில்களின் கூட்டம் என்று எண்ணுமாறு; ஒருபால் மலிந்தது - ஒருபக்கம் நிறைந்தது.

   (வி - ம்.) மின்னுகுழை : வினைத்தொகை. மின்னுயர் பொன் வரை : வினைத்தொகையடுக்கு. பொறிமயில் - புள்ளிமயில். தோகை - மயில் : ஆகுபெயர்.

( 16 )
2118 பாடன் மகளிரும் பல்கலை யேந்தல்கு
லாடன் மகளிரு மாவண வீதி தொ
றோட வுதிர்ந்த வணிகல முக்கவை
நீடிருள் போழு நிலைமைத் தொருபால்.

   (இ - ள்.) ஒருபால் - ஒருபக்கம்; பாடல் மகளிரும் - பாடும் மங்கையரும்; பல்கலை ஏந்து அல்குல் ஆடல் மகளிரும் - பல மணிகளையுடைய மேகலையைத் தாங்கிய அல்குலையுடைய ஆடும் மங்கையரும்; ஆவண வீதிதோறும் ஓட - கடைத்தெரு வெங்கும் ஓடுதலின்; உதிர்ந்த அணிகலம் உக்கவை - கழன்ற கலங்கள் சிந்தினவை; நீடுஇருள் போழும் நிலைமைத்து பேரிருளையும் நீக்கும் நிலையது.