பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1200 

   (இ - ள்.) தேன்மலர் அம்கண் திருவே! புகுதக! - தேனையுடைய மலரில் வாழும் திருவே! புகுக!; மாமலர்க் கோதை மணாளன் புகுதக! - உயர்ந்த பூங்கோதையாளின் மணாளனே ! புகுக!; காமன் புகுதக - காமனே! புகுக!; காளை புகுதக - காளையே! புகுக!; நாம எழில் விஞ்சை நம்பி புகுதக! - அச்சுறுத்தும் அழகினையுடைய வித்தியாதர மகனே புகுக!

   (வி - ம்.) 'திருவே! என்றது உவப்பினால் வந்த பால் வழுவமைதி. மாமலர்க்கோதை : தந்தை : இலக்கணையுமாம்; திருமகளுமாம். தத்தையை மணந்ததனால் 'விஞ்சை நம்பி' ஆயினன்.

   புகுதக : ஒரு கொல் விழுக்காடு ; புகுதுக : என்றவாறு - திரு, மணாளன், காமன்! காளை நம்பி ! என்பன விளிகள்.

( 20 )
2122 மின்றோய் வரைகொன்ற வேலோன் புகுதக
வின்றேன் கமழ்தா ரியக்கன் புகுதக
வென்றோன் புகுதக வீரன் புகுதக
வென்றே நகர மெதிர்கொண் டதவே.

   (இ - ள்.) மின்தோய் வரைகொன்ற வேலோன் புகுதக! - மின்னையுடைய முகில் தங்கும் மலையைப் பிளந்த வேலேந்திய முருகனே! புகுக!; இன்தேன் கமழ்தார் இயக்கன் புகுதக! - இனிய தேன் மணக்குந் தாரையுடைய இயக்கனே! புகுக!; வென்றோன்! புகுதக! - வென்றியுடையவனே! புகுக. வீரன்! புகுதக! - வீரனே! புகுக!; என்று - என்று கூறியவாறு; நகரம் எதிர்கொண்டது - நகரம் வரவேற்றது.

   (வி - ம்.) புகுதக : ஒருசொல் நீர்மைத்து.

   வரைகொன்ற வேலோன் : முருகன். இயக்கன் - தேவரின் ஒரு வகையினன். வென்றோன் : வினையாலணையும் பெயர். நகரம் : ஆகுபெயா

( 21 )
2123 இடிநறுஞ் சுண்ணஞ் சிதறியெச் சாருங்
கடிகமழ் மாலையுங் கண்ணியுஞ் சிந்தித்
துடியடு நுண்ணிடைத் தொண்டையஞ் செவ்வாய்
வடியடு கண்ணியர் வாழ்த்துபு நிற்பார்.

   (இ - ள்.) எச்சாரும் - எப்பக்கத்தினும்; இடி நறுஞ் சுண்ணம் சிதறி - இடித்த நல்ல சுண்ணத்தைத் தூவி; கடிகமழ் மாலையும் கண்ணியும் சிந்தி - மணங்கமழும் மாலையும் கண்ணியும் சிதறி; துடி அடு நுண் இடைத் தொண்டை அம் செவ்வாய்வடி அடு கண்ணியர் - துடியை வென்ற நுண்ணிடையையும், கொவ்வைக்கனி போன்ற செவ்வாயையும் மாவடுவை வென்ற