பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1212 

மலர்மாலை யணிந்த விரிசிகன் என்பான் விளங்குமாறு படிக்கின்றான்.

   (வி - ம்.) கருமம் - குறிக்கோள் - ஒட்டி - துணிந்து, பொறி - இலச்சினை. நாகம் - ஒரு மரம்; ஈண்டு அதன் மலர்க்கு ஆகுபெயர்- 'விரசிகன்' என்றும் பாடம். அன்று, ஏ : அசைகள்.

( 42 )
2144 விதையத்தார் வேந்தன் காண்க
  கட்டியங் கார னோலை
புதையவிப் பொழிலைப் போர்த்தோர்
  பொய்ப்பழி பரந்த தென்மேற்
கதையெனக் கருதல் செய்யான்
  மெய்யெனத் தானுங் கொண்டான்
சிதையவென் னெஞ்சம் போழ்ந்து
  தெளிப்பினுந் தெளிநர் யாரே.

   (இ - ள்.) கட்டியங்காரன் ஓலை விதையத்தார் வேந்தன் காண்க - கட்டியங்காரன் ஓலையை விதைய நாட்டு மன்னன் காண்க; ஓர் பொய்ப்பழி இப்பொழிலைப் புதையப் போர்த்து என்மேற் பரந்தது - ஒரு பொய்ப் பழி இவ்வுலகில் உள்ளோர் அறிவைக் கெடுத்து என் மேற் கிடந்ததனை; தானும் கதை எனக் கருதல் செய்யான் மெய்யெனக் கொண்டான் - தானும் கதை யென்று எண்ணாதவனாகி மெய்யென்றே கொண்டான்; சிதைய என் நெஞ்சம் போழ்ந்து - இனி என் உயிர் கெடும்படி; என் உள்ளத்தைப் பிளந்து காட்டித்தெளிவித்தாலும் தெளிவார் இல்லை.

   (வி - ம்.) சச்சந்தன் அரச வுரிமையை எய்தக் கூடியவன் கோவிந்தனே ஆதலின், அவனை வரவழைத்து வஞ்சகமாகக் கொல்லக் கருதிக் கட்டியங்காரன் திருமுகம் விட்டான். உலகம் தன் கூற்றைத் தெளியா தெனினும்,. கோவிந்தன் அறிஞனாதலின் தெளிவான் என்று புகழ்ந்து தன் கருத்தை அறிவிப்பதாகக் கூறுகின்றான்.

( 43 )
2145 படுமணிப் பைம்பொற் சூழிப் பகட்டின மிரியப் பாய்ந்து
  கொடிநெடுந் தோ்க ணூறிக் கொய்யுளை மாக்கள் குத்தி
யிடுகொடி யணிந்த மார்ப ரிருவிசும் பேறச் சீறி
  யடுகளிற் றசனி வேக மலமர வதனை நோனான்.

   (இ - ள்.) அடுகளிறு அசனி வேகம் - கொல்களிறாகிய அசனி வேகம்; படுமணிப் பைம்பொன் சூழிப் பகட்டினம் இரியப் பாய்ந்து - ஒலிக்கும் மணியையும் பொற்பட்டத்தையும் உடைய யானைத் திரள் ஓடும்படி பாய்ந்து, கொடிநெடுந் தேர்கள் நூறி - கொடியையுடைய உயர்ந்த தேர்களைப் பொடியாக்கி;