பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1214 

2147 நினைத்துத்தா னெடிதல் செல்லா
  தென்சொலே தெளிந்து நொய்தாச்
சினக்களி யானை மன்னன்
  வருகெனச் செப்பி னானே.

   (இ - ள்.) தனக்கு யான் உயிரும் ஈவேன் - கோவிந்தனுக்கு யான் உயிரையும் தருவேன்; தான்வரப் பழியும் நீங்கும் அவன் வரின் பழியும் விலகும்; எனக்கு இனி இறைவன் தானே - எனக்கு இனிமேல் அவனே அரசன்; இருநிலக் கிழமை நினைத்து வேண்டி - (ஆதலால்) பெருநில ஆட்சியை ஆராய்ந்து விரும்பி; தான் என் சொலே தெளிந்து - அவன் என் மொழியையே நம்பி : நெடிதல் செல்லாது நொய்துஆ - காலத்தை நீட்டியாமல் விரைவாக ; சினக்களி யானை மன்னன் வருக - சீற்றமுறும் களிற்றையுடைய அரசன் வருக; எனச் செப்பினான் - என்று விரிசிகன் படித்தான்.

   (வி - ம்.) 'வருக' என்னும் அளவும் ஓலையில் எழுதியிருந்த வாசகம். 'நெடித்தல்' என்பது 'நெடிதல்' என விகாரப்பட்டது. 'உயிரும் ஈவேன்' என்று ஊழ் கூறுவித்தது.

( 46 )
2148 ஓலையுட் பொருளைக் கேட்டே
  யொள்ளெயி றிலங்க நக்குக்
காலனை யளியன் றானே
  கையினால் விளிக்கு மென்னா
நூல்வலீ ரிவனைக் கொல்லு
  நுண்மதிச் சூழ்ச்சி யீதே
போல்வதொன் றில்லை யென்றான்
  புனைமணிப் பொன்செய் பூணான்.

   (இ - ள்.) ஓலையுள் பொருளைக் கேட்டு - அவ்வோலையில் உள்ள பொருளைக் கேட்டு; புனைமணிப் பொன்செய் பூணான் - மணிகளிழைத்துப் பொன்னாற் செய்யப்பெற்ற அணிபுனைந்த சீவகன்; ஒள்எயிறு இலங்க நக்கு - ஒள்ளிய பற்கள் விளங்க நகைத்து; அளியன் தானே காலனைக் கையினால் விளிக்கும் என்னா - இரங்கத்தக்கான் தானே கூற்றுவனைக் கையினாற் கூப்பிடுகின்றான் என்றெண்ணி; நூல் வலீர்! - நூலுணர்ந்த வர்களே!; இவனைக் கொல்லும் நுண்மதிச் சூழ்ச்சி ஈதேபோல்வது ஒன்று இல்லை என்றான் - இவனைக் கொல்கிற நுண்ணறிவினால் ஆராயும் சூழ்ச்சி இதனைப் போல்வது பிறிதொன்று இல்லை என்றனன்.