பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1225 

2166 சிங்கத்துரி போர்த்தசெழுங் கேடகமும் வாளும்
பொங்குமயில் வேலும்பொரு வில்லுமுடன் பரப்பி
மங்குலிடை மின்னுமதி யுஞ்சுடரும் போல
வெங்கட்டொழிற் கூற்றுமரண் சேரவிரிந் தன்றே.

   (இ - ள்.) சிங்கத்து உரி போர்த்த செழுங் கேடகமும் - சிங்கத்தின் தோலைப் போர்த்த நல்ல கேடகமும்; வாளும் பொங்கும் அயில் வேலும் பொரும் வில்லும் உடன் பரப்பி - வாளும் ஒளி பொங்கும் கூரிய வேலும் போருக்குரியி வில்லும் சேரப் பரப்பி; மங்குலிடை மின்னும் மதியும் சுடரும்போல - முகிலிடையில் மின்னும் பிறைத் திங்களும் ஞாயிறும் போல; வெங்கண் தொழில் கூற்றும் அரண் சேர விரிந்தன்று - கொடுந்தொழிலில் வல்ல கூற்றுவனும் தனக்கு ஓர் அரணை அடையும் படி விரிந்தது;

   (வி - ம்.) கேடகத்திற்கு ஞாயிறும், வாளிற்கும் வேலிற்கும் மின்னும், வில்லிற்குப் பிறையும் உவமை.

( 65 )

வேறு

2167 செம்பொ னீண்முடித் தோ்மன்னர் மன்னற்குப்
பைம்பொ னாழிதொட் டான்படை காட்டினா
னம்பொ னொண்கழ லானயி ராவணம்
வெம்ப வேறினன் வெல்கென வாழ்த்தினார்.

   (இ - ள்.) செம்பொன் நீள் முடித் தேர்மன்னர் மன்னற்கு - செம் பொன்னாலாகிய நீண்ட முடியை உடைய தேர்மன்னர்களின் மன்னனாகிய கோவிந்தனுக்கு; பைம்பொன் ஆழி தொட்டான் படை காட்டினான் - ஏனாதி ஆழியணிந்த படைத் தலைவன் (இவ்வாறு) படைகளைக் காட்டினான்; அம்பொன் ஒண் கழலான் அயிராவணம் வெம்ப ஏறினன் - (பிறகு) அழகிய சிறந்த பொற்கழலானாகிய கோவிந்தன் அயிராவணம் என்னும் யானை மீது கடுக ஏறினான்; வெல்க என வாழ்த்தினார் - (அப்போது) வெல்க! என்று எல்லோரும் வாழ்த்தினர்.

   (வி - ம்.) மன்னர் மன்னன் : கோவிந்தன் செம்பொன்னாழி என்றது ஏனாதிமோதிரத்தை. அயிராவணம் - கோவிந்தமன்னன் பட்டத்துயானை. வெம்ப - விரைந்து.

( 66 )
2168 சிறுவெண் சங்கு முரன்றன திண்முர
சறையு மாக்கடல் காரென வார்த்தன
நெறியி னல்கின புள்ளு நிமித்தமு
மிறைவன் கண்வல னாடிற் றியைந்தரோ.