பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1226 

   (இ - ள்.) சிறு வெண் சங்கு முரன்றன - சிறு வெண்மையான சங்குகள் ஒலித்தன; அறையும் மாக்கடல் கார் எனத் திண்முரசு ஆர்த்தன - ஒலிக்கும் பெரிய கடலெனவும் முகில் எனவும் திண்ணிய முரசுகள் முழங்கின! புள்ளும் நிமித்தமும் நெறியின் நல்கின - பறவைகளின் செலவும் ஒலியும் நிறைகுடம் முதலியனவும் நெறியிலே நன்மையை அறிவித்தன; இறைவன்கண் இயைந்து வலன் ஆடிற்று - அரசனுக்குக் கண் பொருத்தமாக வலப்பக்கத்திலே ஆடிற்று.

   (வி - ம்.) இயைந்து ஆடிற்று -விடாமல் ஆடியது எனினும் ஆம்

( 67 )
2169 மல்லல் யானைக் கறங்கு மணியொலி
யல்ல தைங்கதி மான்கொழுந் தாரொலி
கல்லெ னார்ப்பொலி மிக்கொளிர் வாண்மினிற்
செல்லு மாக்கடல் போன்றது சேனையே.

   (இ - ள்.) மல்லல் யானைக் கறங்கும் மணி ஒலி - வளம் பொருந்திய யானையிடம் ஒலிக்கும் மணியொலியும்; அல்லது - அதுவன்றி; ஐங்கதி மான் கொழும் தார் ஒலி - ஐங்கதியாகச் செல்லும் குதிரையின் கழுத்திற் கட்டிய தாரிலுள்ள கிண்கிணி ஒலியும்; கல் என் ஆர்ப் பொலி - கல்லெனப் படைகளிடையே எழும் ஆரவார ஒலியும்; மிக்கு - மிகுந்து; ஒளிர் வாள் மினின் - விளங்கும் வாள் ஒளியுடன்; செல்லும் மாக்கடல் போன்றது சேனை - செல்கின்ற பெரிய கடல் போன்றது படையின் செலவு.

   (வி - ம்.) ஐங்கதி : ”விக்கிதம் வற்கிதம் வெல்லும் உபகண்டம்” - மத்திமம் சாரியோடு ஐந்து.

( 68 )
2170 மாலை மாமதி வெண்குடை மல்கிய
கோவக் குஞ்சி நிழற்குளிர் பிச்சமுஞ்
சோலை யாய்ச்சொரி மும்மதத் தானிலம்
பாலை போய்மரு தம்பயந் திட்டதே.

   (இ - ள்.) மாலை மாமதி வெண்குடை - மாலையில் தோன்றும் முழுமதி போன்ற வெண்குடையாலும் ; மல்கிய கோலக் குஞ்சி - நிறைந்த அழகிய சிற்றணுக்கன் என்னும் விருதினாலும்; நிழல் குளிர் பிச்சமும் - நிழலைத் தரும் குளிர்ந்த பீலிக் குடையாலும்; சோலையாய் - சோலையாகி; சொரி மும்மதத்தால் - யானை பெய்யும் மும்மதத்தினால்; நிலம் பாலை போய் மருதம் பயந்திட்டது - நிலம் பாலைத் தன்மை நீங்கி மருத நிலத் தன்மை உண்டாக்கிற்று