பக்கம் எண் :

மண்மகள் இலம்பகம் 1227 

   (வி - ம்.) மாலைமாமதி - மாலைப்பொழுதிற் றோன்றும் முழுத் திங்கள். குஞ்சி - சிற்றணுக்கன் என்னும் விருது. பிச்சம் - பீலிக் குடை. குடைமுதலிய இவற்றால் சோலையாய் என்க. பாலை - பாலைத் தன்மை நிலம் பாலைபோய் மருதம் பயந்திட்டது என்க.

( 69 )
2171 மன்றன் மாமயி லார்த்தெழ மானினங்
கன்றி னோடு கலங்கின காற்பெய
வென்றி வேற்படை யஞ்சி வனத்தொடு
குன்றெ லாங்குடி போவன போன்றவே.

   (இ - ள்.) மன்றல் மாமயில் ஆர்த்து எழ - பெடையுடன் கூடும் மயில்கள் ஆர்த்தெழுத லானும்; மானினம் கன்றினோடு கலங்கின காற்பெய - மான் திரள் கன்றினுடன் கலங்கி ஓடுதலாலும்; வென்றி வேற்படை அஞ்சி - வெற்றியுறும் வேலேந்திய இப்படையைக் கண்டு நடுங்கி; வனத்தொடு குன்று எலாம் குடிபோவன போன்ற - காடும் மலையும் குடிபோவனபோல இருந்தன.

   (வி - ம்.) மன்றல் - மணம். பெடையை மணந்த மயில் என்க. கலங்கின : முற்றெச்சம். காற்பெய்தலாவது - ஓடுதல்.

( 70 )

வேறு

2172 படுகண் முழவி னிமிழருவி
  வரையுங் காடும் பலபோகி
யிடுமண் முழவி னிசையோவா
  வேமாங் கதநாட் டெய்தியபி
னெடுவெண் ணிலவி னெற்றிதோய்
  நிழலார் செம்பொற் புரிசையே
கடிமண் காவல் கருதினான்
  கோயி லாகக் கருதினான்.

   (இ - ள்.) படுகண் முழவின் இமிழ் அருவி வரையும் காடும் பல போகி - ஒலிக்கும் கண்ணையுடைய முழவைப்போல ஒலிக்கும் அருவி அசையும் மலைகள் பலவற்றையும் காடுகள் பலவற்றையும் கடந்து; மண் இடு முழவின் இசை ஓவா - மண் இட்ட முழவின் ஒலி மாறாத; ஏமாங்கத நாடு எய்திய பின் - ஏமாங்கத நாட்டை அடைந்த பிறகு; நெடுவெண் நிலவின் நெற்றி தோய் நிழல் ஆர் செம்பொன் புரிசையே - முழு வெண்மதியின் உச்சியில் தோயும் ஒளி பொருந்திய பொன் மதிலையே, கடிமண் காவல் கருதினான் கோயில் ஆகக் கருதினான் - சீவகன் புதுமையாகப் பூமியை யரசுபுரியும்படி செய்யக் கருதிய கோவிந்தன் தன் இருப்பிடமாகக் கொண்டான்.