(வி - ம்.) கோவிந்தன் ஏமாங்கதத்திலே இராசமாபுரநகரின் மதிற்புறத்திலே தங்கினான்.
(இ - ள்.) போக மகளிர் வலக்கண்கள் துடித்த - கட்டியங்காரனுடைய காமக் கிழத்தியரின் வலக்கண்கள் துடித்தன; பொல்லாக் கனாக் கண்டார் - அவர்கள் தீய கனவுகளைக் கண்டனர்; மன்னற்கு ஆகம் ஒளி மழுங்கிற்று - கட்டியங்காரனுக்கு மேனி ஒளி மயங்கியது; கூகை கோயில் பகல் அஞ்சத்தக்க குரலினாற் குழற - கூகையானது, அரண்மனையிலே பகற் காலத்திலே அஞ்சத் தக்க குரலினாற் குழறிக் கூவ; கொற்றம் முரசம். பாடு அவிந்து - வெற்றி முரசம் ஒலி அவிய; மாகம் நெய்த்தோர் சொரிந்து - வானத்தினின்றும் குருதி மழை பெய்ய; மண்ணும் விண்ணும் எங்கும் அதிர்ந்த - நிலமும் வானமும் அந்நாடெங்கும் அதிர்ந்தன.
(வி - ம்.) கோவிந்தன் மகிற் புறத்தே தங்கியபின் கட்டியங்காரனுக்குற்ற தீய நிமித்தங்கள் கூறப்பட்டன. நிலமதிர்தல், நிலநடுக்கம்; வானதிர்தல் : முகிலின்றி யிடித்தல்.
(இ - ள்.) கூற்றம் வந்து புறத்து இறுத்தது அறியான் - கூற்றுவன் வந்து மதிலின் வெளியே தங்கியதை அறியாத கட்டியங்காரன்; கொழும் பொன் உலகு ஆள்வான் இங்கு வீற்றிருந்தேன் என மகிழ்ந்து - வளமிகும் செல்வம் நிறைந்த